1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (11:18 IST)

கொரோனா வைரஸ்: அதிகரிக்கும் எண்ணிக்கை - ரஷ்யாவை முந்திய இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 413ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குச் சென்றுள்ளது.

இந்தியா தொடர்ந்து அந்த பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வந்த நிலையில் தற்போது ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்குச் சென்றுள்ளது.

முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் ஆறு லட்சத்து 80 ஆயிரத்து 283 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 20 லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 2 லட்சத்து 53ஆயிரத்து 287 பேர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 லட்சத்து 24 ஆயிரத்து 4432 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 19 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 425 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாநிலமாக உள்ளது. அம்மாநிலத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகப்படியானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் நிலவரம்

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் அதிகப்படியாக சென்னையில் 68 ஆயிரத்து 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 6 ஆயிரத்து 633 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 510ஆக உள்ளது.