பெண்களின் 'இடம்' குறித்த சர்ச்சை: "தமிழ்நாட்டிலும் முற்போக்குக் கருத்துக்கள் நீர்த்து வருகின்றன"


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 18 அக்டோபர் 2016 (17:19 IST)
நைஜீரிய அதிபர் முகமது புஹாரியின் மனைவி அடுத்த தேர்தலில் கணவருக்கு ஆதரவு தரப்போவதில்லை எனக் கூறியதை அடுத்து, புஹாரி தனது மனைவியின் இடம் சமையல்அறை தான் என்று தெரிவித்திருப்பது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
 
இந்நிலையில், தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் அரசியல் பங்கேற்பு குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகியிடம் கேட்டபோது, ''நைஜீரிய அதிபரின் கருத்தைப் போன்ற கருத்துக்களை இங்கு தமிழகத்தில் பலர் கொண்டுள்ளனர். பல உதாரணங்கள் உள்ளன.
 
ஒரு சாதி அமைப்பைச் சேர்ந்த தலைவர் பெண்களை கணினி சார்ந்த படிப்புகளை படிக்க வைக்கக் கூடாது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை அவர்கள் கற்றுக் கொள்ளவதைத் தடுக்க வேண்டும் என்கிறார். மற்றொருவர், பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்'' என வாசுகி தெரிவித்தார்.
 
அவர் மேலும், ''பெண்களின் முன்னேற்றத்திற்கு திராவிட மற்றும் பொதுவுடைமை அமைப்புகள் பெரும் பங்காற்றின. தந்தை பெரியார் போன்றார் பெண்களின் உரிமைக்காகப் போராடினர். ஆனால் இன்றைய நிலையில் திராவிட காட்சிகள் தங்களது அடிப்படை கொள்கையான பெண்களுக்குச் சமத்துவம் என்ற நிலையை தேர்தல் லாபத்திற்காக விட்டுக் கொடுத்துவிட்டனர்'' என்றார்.
 
நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு பற்றிப் பேசிய வாசுகி, ''கணிசமான ஊராட்சிகளில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள் தான் பதவிக்கான அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டும்'' என்றார்.

இதில் மேலும் படிக்கவும் :