1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (11:02 IST)

3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் சென்னை தம்பதியை வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர்.
அந்த கன்டெய்னர்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 
அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதை பவுடர்கள், ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
ஹெராயின் போதைப்பவுடர்கள் சோப்புக்கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதையும் அவை இடம்பெற்ற கன்டெய்னர்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தது விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனம் என்றும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அந்த கன்டெய்னர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த கன்டெய்னர்கள் விஜயவாடாவுக்கு அனுப்பவிருந்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதை அந்த நகர காவல் ஆணையர் ஸ்ரீநிவாசுலு மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
 
இந்த நிலையில், விஜயவாடா நிறுவனம் பதிவு செய்யப்பட்ட முகவரியில் ஒரு பழைய வீடு மட்டுமே இருந்ததாகவும் அந்த நிறுவனம், அந்த வீட்டில் வசித்த பெண்மணியின் மகள் வைஷாலி பெயரில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த வைஷாலி மச்சாவரம் சுதாகர் என்ற சென்னை குடியிருப்புவாசியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வருபவர்.
 
இதை அறிந்து அவர்களின் சென்னை வீட்டுக்குச் சென்ற வருவாய் புலனாய்வுத்துறையினர் வைஷாலி, சுதாகர் இருவரையும் விசாரணைக்காக குஜராத் அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை கைது செய்த அதிகாரிகள்,திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார். இதன் பிறகே இந்த கைது விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தகவலின் முழு விவரமும் தெரிய வந்துள்ளது.
 
இந்த கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு ஆப்கானியர்கள் தடுத்து வைக்கப்பட்டு வருவாய் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த போதைப்பொருள் மதிப்பை வைத்து, இதில் தொடர்புடைய பணப்பரிவர்த்தனை பல்லாயிரக்கணக்கான கோடியில் இருப்பதால் இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்பது குறித்து இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகமும் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் அதிகாரிகள் குழு ஏற்கெனவே குஜராத்தில் உள்ளனர்.
 
வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கை மற்றும் மதிப்பில் கடத்தப்பட்ட போதைப்பொருளை இந்திய அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பறிமுதல் செய்திருக்கவில்லை.
 
ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிகாரத்தை தாலிபன் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டில் இருந்து இந்த போதைப்பொருட்கள் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
 
இந்த போதைப்பொருட்களை இந்தியாவில் அதுவும் விஜயவாடாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனம் எந்த பின்புலத்தில் இறக்குமதி செய்தது, இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ள என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
 
அதானி துறைமுகம் விளக்கம்
தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல் போல, ஆப்கன் ஹெராயின் இறக்குமதி விவகாரத்தில் ஆப்கானிஸ்தான், இரான், குஜராத் என தொடங்கி விஜயவாடா, சென்னை வரை கண்டுபிடிக்கப்பட்ட தொடர்புகள், இப்போது டெல்லி நோக்கியும் விரிவடைந்துள்ளது. ஆனால், அந்த கன்டெய்னர்கள் டெல்லியில் யாருக்கு அனுப்பப்படுவதாக இருந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
 
இந்த விவகாரத்தை மேலும் ஆழமாக விசாரித்தால், அது அடிப்படை வணிக வசதி கூட இல்லாத டிரேடிங் நிறுவனத்தை விஜயவாடாவில் நடத்தி வந்த சென்னை தம்பதியுடன் நின்று விடாது என்று தோன்றுகிறது. மேலும், இந்தியா முழுவதும் நடந்து வரும் போதைப்பொருள் வியாபாரம், அதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆப்கானிஸ்தானில் அதிகம் விளையும் போதைப்பொருள்
 
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பி செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தாலிபன் கூறுகிறது.
 
ஆனால் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 -ல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் விளைச்சல் அதிகரித்துள்ளது.
 
இதற்கிடையே, குஜராத் முந்த்ரா துறைமுகத்தை நடத்தி வரும் அதானி குழுமம், "எங்களுடைய கட்டுப்பாட்டில் துறைமுகம் கையாளப்பட்டாலும், அதில் உள்ள கன்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை திறக்கும் அதிகாரமும் அவர்களுக்கே உள்ளது. அதில் எங்களுடைய பணி ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அதானி குழுமத்தை தொடர்புபடுத்தி வெளியிடப்படும் செய்தி தவறானது," என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் எவ்வளவு அபின் உற்பத்தி செய்யப்படுகிறது?
அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெராயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
 
போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
 
அபின் பற்றி தாலிபன் கூறியிருப்பது என்ன?
ஆப்கானிஸ்தான் ஆளுகையை கைப்பற்றியுள்ள தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஸபியுல்லா மாஜிஹித், "நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதைமருந்தும் தயாரிக்கப்படவில்லை. அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப்பொருள் கடத்தல் இருக்காது என்று தெரிவித்தார்.
 
தாலிபன்களின் ஆட்சியில் போதைப் பொருள் நிலை என்ன?
 
முதலில், தாலிபன் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998-ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000-ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது.
 
இது பெரும்பாலும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும்.
 
ஆனால் 2000-ஆம் ஆண்டு ஜூலையில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர்.
 
தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறது.
 
தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002ல் அபின் மற்றும் ஹெராயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது. ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது.
 
இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம்.
 
உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது.