வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (12:57 IST)

போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொந்தளித்த மக்கள் - முழு விவரம்

நஹெல் எனும் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
 
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து தொடங்கிய அங்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் சோபியா பெட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 17 வயது மதிக்கத்தக்க நஹெல்.எம் என்ற சிறுவன், பிரான்சின் ஒரு முக்கியப் பகுதியில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தச் சொல்லியதாகத் தெரிகிறது.
 
ஆனால், சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றதுடன், தன்னிடம் ஆவணங்களைக் கேட்ட போலீஸ் மீது மோதும் நோக்கில் காரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
சிறுவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவரை நோக்கிச் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சிறுவனின் கார் கண்ணாடி அருகே சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவதும், அதன் பின்னர் அதே தொலைவில் இருந்து சிறுவனைச் சுடும் காட்சிகளும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
 
இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஏ.எஃப்.பி செய்தி முகமை உறுதி செய்துள்ளது.
 
அதிபர் சொல்வது என்ன?
“சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மன்னிக்க முடியாதது என்று கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அவரது மரணத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது” என்றும் கூறியுள்ளார். அதிபர் இவ்வாறு கூறியுள்ளதற்கு போலீஸ் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
 
இதனிடையே, “இந்தச் சம்பவத்தை வைத்து, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளனர்,” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், கடந்த இரண்டு நாட்களில், இரவு நேரங்களில் தீவைப்பு, வெடி வைத்தல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக அரசு கட்டடங்கள், கார்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
 
ஆறாயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி
இந்த நிலையில், நஹ்லின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இறந்த சிறுவனின் தாயார் அழைப்பு விடுத்திருந்தார்.
 
அவரது அழைப்பை ஏற்று, நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
நாடு முழுவதும் பரவிய போராட்டம்
 
சிறுவனின் மரணத்தைக் கண்டித்து பிரான்சின் பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துலூஸ் நகரில் போராட்டக்காரர்கள் பொது சொத்துகளைத் தீயிட்டு எரிக்க முயன்றதாகவும், தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்களை கல்வீசித் தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இதேபோன்று, பிரான்சின் வட பகுதியில் அமைந்துள்ள லில்லி நகரில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்சில் நகரில் சுமார் 300 பேர் கூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இவர்களில் பலர் ஆத்திரத்தில் அங்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட முயன்றதாகவும், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நிலைமையைத் தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாரிஸ் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
 
அதிபரின் கருத்தும், போலீஸ் சங்கங்களின் எதிர்ப்பும்
“சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை மன்னிக்க முடியாதது எனவும், இதை எந்தக் காரணம் கொண்டும் நியாயப்படுத்த இயலாது” என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கருத்து தெரிவித்திருந்தார். அதிபரின் இந்தக் கருத்துக்கு ஃபிரான்சில் உள்ள பல்வேறு போலீஸ் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
“ஒரு வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அதில் குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாகக் கருத முடியாது. ஆனால், சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக அதிபர் அவசரப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்,” என்று அலையன்ஸ் போலீஸ் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
 
சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை ‘துணிவு மிக்கவர்’ என்று குறிப்பிட்டு, மற்றொரு போலீஸ் சங்கம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும், ‘அந்தச் சிறுவனை அவரது குடும்பம் நல்ல விதத்தில் வளர்க்கவில்லை’ என்று அந்தச் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
 
ஆனால், “அதிபரை விமர்சிப்பது போன்ற அரசியல் தலையீடு, காவல்துறையின் மீதான வெறுப்பை அதிகரிக்கும்” என்று ‘யுனைட் எஸ்ஜிபி போலீஸ்’ எனும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 
“சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த முயன்றால், காவல் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் எச்சரித்துள்ளார்.
நஹெலின் தாய் சொன்னது என்ன?
நஹெல் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தகவலைக் கேட்டதும் அவரது தாய் மோனியா அதிர்ந்து போனார். மகனை இழந்து தவிக்கும் நிலையில், சமூக ஊடகத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
 
அதில், “நஹெல் ஒரு குழந்தையைப் போன்றவன். அவனுக்கு என்னுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு கிளம்பியபோதும், ‘ஐ லவ்யூ அம்மா’ என்று அன்பான வார்த்தைகளைக் கூறி, என்னை முத்தமிட்டுவிட்டு தான் சென்றான்.
 
அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனது வாழ்க்கையில் எல்லாமுமாக என் மகன் இருந்தான். இப்போது அவனை இழந்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று மோனியா அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.
 
அத்துடன், தனது மகனின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
ஃபிரான்ஸ் போலீசுக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வகை செய்யும் சட்டம் 2017இல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
 
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஓடும் கார்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என்று ‘Le Monde’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
 
போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தால், கறுப்பின மக்கள் அவர்களின் துப்பாக்கிகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகரித்துள்ளது என்று மனித உரிமை ஆர்வலரான ரோகயா டயல்லோ அச்சம் தெரிவித்துள்ளார்.
 
நஹெல் கொலை நினைவூட்டும் 2005 சம்பவம்
தற்போது சிறுவன் கொல்லப்பட்டது போன்றதொரு சம்பவம், 2005இல் ஃபிரான்சில் நிகழ்ந்துள்ளது. அப்போது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், ஒரு துணை மின் நிலையத்திற்குள் சென்று ஒளிந்தனர்.
 
அப்போது ஃபிரான்சின் அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி, அவ்விரு இளைஞர்களையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். அத்துடன் அவர்களைக் கெட்டவர்கள் என்றும் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
 
அவர் கூறியபடியே, போலீசார் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் பங்கேற்றவர்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளைத் தீயிட்டு எரித்தனர். சில வாரங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தங்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
 
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திற்கு நிச்சயம் நினைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, 2005இல் நிகழ்ந்ததைப் போன்று மீண்டுமொரு முறை விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்வதைத் தற்போதைய அரசு நிச்சயம் விரும்பாது.
 
தான் கூறும் வார்த்தைகள் அமைதிக்கும் வழி வகுக்கும்; அதேநேரம் வன்முறையையும் தூண்டும் என்பதை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நன்கு உணர்ந்திருக்கிறார் என்று பாரீசில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ஃபிரான்ஸ் அதிபர் ஆறுதல் செய்தி அனுப்பி உள்ளார்.
 
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 13 பேரை சுட்டுக்கொன்ற ஃபிரான்ஸ் போலீஸ்
ஓய்வூதியம் தொடர்பான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வதைக் கண்டித்து, ஃபிரான்ஸ் மக்கள் ஏற்கெனவே வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
 
இந்த விஷயத்தில் பொதுமக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தற்போது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து, பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மீண்டும் 2005இல் நிகழ்ந்ததைப் போன்று நீடிக்க அனுமதிக்க கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.
 
இதைக் கருத்தில் கொண்டே அதிபர் மக்ரோனும், அவரது அமைச்சரவை சகாக்களும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகின்றனர்.
 
கடந்த 2017இல் இருந்து, ஃபிரான்ஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவர்களில் பெரும்பாலோர் கறுப்பினத்தவர்கள் அல்லது அரேபியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சாலை போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 13 பேர் பிரான்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
தற்போது கொல்லப்பட்டுள்ள சிறுவன் நஹெலும், பிரெஞ்சு -அல்ஜீரியன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிறுவனின் அண்டை வீட்டுக்காரர்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.