திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (16:01 IST)

'பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை; பாதிப்பு இல்லாமல் செய்ய முயற்சி' - தங்கம் தென்னரசு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 13 ஊர்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் போன்றவை இவற்றில் அடங்கியிருக்கின்றன.

சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்த நிலையிலும், வாழ்வாதாரம் பறிபோவதாகக் கூறி கிராம மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், சென்னை வரை வெள்ள அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.

பெங்களூரு, ஹைதராபாத்துடன் சென்னையை ஒப்பிட்ட அமைச்சர்

விமான நிலையம் அமைக்கத் தங்கள் விளை நிலத்தைத் தருவோருக்கு நிலத்தின் மதிப்பை விட 3.46 மடங்கு தர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், வேலைவாய்ப்பு தருவதுடன், வீடுகளை இழப்போருக்கு மாற்று இடம், வேறு வீடு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாளும் திறன் பெற்றுள்ளது. 2025இல் ஆண்டுக்கு 3.5 கோடி பேர் பயன்படுத்துவார்கள் என்று தமது பதிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2009-19 காலகட்டத்தில் ஒன்பது சதவிகித வளர்ச்சி உண்டாகியுள்ளது. 2008இல் நாட்டில் மூன்றாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் தற்போது ஐந்தாம் இடத்துக்கு சென்றுள்ளது; அப்போது ஐந்தாம் இடத்தில் இருந்த பெங்களூர் விமான நிலையம் இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையம் 9% வளர்ந்துள்ள காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் 14 % மட்டும் 12% வளர்ச்சி கண்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 13 கிராமங்களில் விளைநிலங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் பகுதி அளவு மட்டுமே விமான நிலையத்துக்கு போகும் நிலையில், சுமார் 2400 பேர் வசிக்கக் கூடிய ஏகனாபுரம் என்ற கிராமம் முற்றிலும் நில எடுப்பின் கீழ் வருகிறது.

இந்த கிராமம் உள்ள இடம், புதிதாக அமையவுள்ள விமான நிலையத்தின் இரு ஓடுதளங்களுக்கும் இடையே வருகிறது என்று இன்று குறிப்பிட்ட அமைச்சர், திட்ட மேலாண்மை ஆலோசகர்களுடன் ஆலோசித்து, கிராமங்களை மாற்றும் வழிகள் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், ஏகனாபுரம் கிராமம் பாதிக்காத வகையில் விமான நிலையத்தின் அமைப்பு மாற்றப்படுமா அல்லது கிராமமே ஒட்டுமொத்தமாக வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று அவர் தெளிவாகக் கூறவில்லை.

கவன ஈர்ப்பு தீர்மானம்

சட்டமன்றத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் போராட்டம் நடந்துவருவது குறித்தும், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மற்றும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், ஏற்கனவே ஒன்றிய அரசின் உத்தரவாதத்தை நம்பி நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு நிலங்களை வழங்கிய மக்கள் நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தார்.

''ஒன்றிய அரசின் உத்தரவாதத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தற்போது விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கப்படும்போதும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு உத்தரவாதம் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தமிழக அரசின் வாக்குறுதியில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், விமான நிலையத்திற்கு நிலம் வழங்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதி வேண்டும். அவர்களை பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் விமான நிலையம் கொண்டுவரவேண்டும்,''என்றார். மேலும் கம்பன் கால்வாய் என்ற முக்கிய நீர் ஆதாரம் பாதிக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், தனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் கொண்டுவரப்படும் திட்டம் குறித்து பிற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார். ''மக்களிடம் நேரடியாக அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான ஒரு திட்டத்தை நாம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். கிராம மக்களிடம் தொடர்ந்து தெளிவுபடுத்திவருகிறோம். ஆனால் ஒரு சில தீய சக்திகள், சில இயக்கங்கள் மக்களிடம் தவறான ,விஷமான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்,''என்றார் செல்வப்பெருந்தகை

பரந்தூர் விமான நிலையம் பின்னணி

சென்னையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. "பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

விமான நிலையத்துக்காக பரந்தூரை ஒட்டியிருக்கும் 13 கிராமங்களில் 4,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நிலம் எடுக்கப்படும் என்றும் 4 கிராமங்கள் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்திருக்கிறது. குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவை இதில் அடங்கியிருக்கின்றன. நிலம், குடியிருப்புகளுக்கு ஏற்பக மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று வருகின்றனர். "ஊரைவிட்டு வெளியேற மாட்டோம்" என்று போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் கூறுகிறார்கள்.

Updated By: Prasanth.K