புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (13:42 IST)

கான்பூர் முஸ்லிம் ரிக்‌ஷா ஓட்டுனர் மீது தாக்குதல்: ஜெய் ஸ்ரீராம் சொல்ல நிர்பந்தம் - 3 பேர் கைது

கான்பூரில் முஸ்லிம் ரிக்‌ஷா ஓட்டுனரை அடித்து நொறுக்கி, பலவந்தமாக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வைத்த விவகாரத்தில் மூன்று பேர் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், சிலர் ரிக்‌ஷா ஓட்டுனரை அடிப்பதை பார்க்க முடிகிறது. கூட்டத்தில் இருந்த சிலர் அஸ்ரார் அகமது என்ற அந்த ரிக்‌ஷா ஓட்டுனரிடம், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடும்படி வலியுறுத்தினர். வியாழக்கிழமை, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

"கான்பூர் நகரின் பர்ரோ காவல்நிலையப்பகுதியில் அஸ்ரார் அகமது மீதான தாக்குதல் மற்றும் அவமதிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன," என்று கான்பூர் போலீஸ் ஆணையர் அசீம் அருண் தெரிவித்தார்.

கான்பூரில் நடந்தது என்ன?

ரிக்‌ஷா ஓட்டுனரின் ஏழு வயது மகள், தனது தந்தையை விட்டுவிடுமாறு கெஞ்சுவதும் வைரலான வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர் சில போலீசார் அந்த ரிக்‌ஷா ஓட்டுனரை தங்கள் ஜீப்பில் அழைத்து செல்வதும் வீடியோவில் காணப்படுகிறது. இருப்பினும், அஸ்ரார் அகமது கூட்டத்தால் அடித்து நொறுக்கப்பட்டபோது, போலீசாரும் அங்கு இருந்தனர்.

இதனிடையே, ஜூலை 9 ஆம் தேதி பார்ரா-8 இல் வசிக்கும் ஒரு குடும்பத்தின் பதின்பருவ மகளிடம் சில இளைஞர்கள் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. குடும்பம் இதை எதிர்த்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதமாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் புகார் பதிவு செய்யப்படவில்லை. ஜூலை 31 அன்று, உள்ளூர் பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி தலையிட்ட பிறகு, சிறுமியின் தாயின் புகாரின் பேரில், சகோதரர்களான சதாம், சல்மான் மற்றும் முகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

"எங்கள் 14 வயது மகள் தினமும் தொந்தரவுக்கு உள்ளாகிறாள். மதமாற்ற நெருக்குதல் குறித்தும் நாங்கள் புகார் செய்தோம். ஆனால் போலீசார் எஃப்ஐஆரில், முறைகேடாக நடந்துகொண்ட பிரிவை மட்டுமே சேர்த்துள்ளனர்," என்று சிறுமியின் தாய் பிபிசியிடம் கூறினார்.

இதுபற்றி அறிந்ததும் சில பஜ்ரங்தள் தொண்டர்கள் புதன்கிழமை குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீட்டை அடைந்தனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் அவர்களது உறவினரான அஸ்ரார் அகமதை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினார்கள். இந்த நேரத்தில் போலீசார் அங்கு இருந்தனர், ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அஸ்ரார் அகமதை அடித்த பஜ்ரங்தள் ஆதரவாளர் கும்பலில் பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதியின் மகனும் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடையாளம் தெரியாத நபர்கள் என்று குறிப்பிட்டே போலீஸார் முதலில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். ஆனால் அந்த வீடியோ வைரலாகி பரபரப்பு அதிகரித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் பெயர்களும் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை மாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வகுப்புவாத பதற்றம்

இதற்கிடையில், வகுப்புவாத பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதி முழுவதிலும் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கூடவே பிஏசி எனப்படும் மாநில சிறப்புக்காவல் படையும் நிறுத்தப்பட்டுள்ளது.

"ஜூலை 12 அன்று, முறைகேடாக நடந்துகொண்டு, மதம் மாற நெருக்குதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி குரேஷா பேகம், இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் மற்றும் அவரது கணவர் மீது பர்ரோ காவல்நிலையத்தில், அடித்து துன்புறுத்தியதான புகார் ஒன்றை பதிவு செய்தார்."என்று தெற்கு கான்பூர் காவல்துறை துணை கமிஷனர், ரவீனா தியாகி தெரிவித்தார். ஜூலை 31 ஆம் தேதி, சதாம், சல்மான் மற்றும் முகுல் ஆகிய மூன்று சகோதரர்களுக்கு எதிராக முறைகேடான நடத்தை உட்பட பிற பிரிவுகளின் கீழ், பதில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பர்ரோ காவல் நிலைய போலீசார் இரு வழக்குகளையும் விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், காவல்துறை ஒருதலைபட்சமாக நடவடிக்கை மேற்கொள்வதாக பஜ்ரங் தளத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப் சிங் பஜ்ரங்கி குற்றம் சாட்டியுள்ளார். 'காவல்துறையிடம் நியாயம் கிடைக்காவிட்டால், எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்கள் துன்புறுத்தப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது' என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, ரிக்‌ஷா ஓட்டுனர் அஸ்ரார் அகமதை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் ஆதரவாளர்கள் வியாழக்கிழமை இரவு போலீஸ் கமிஷனர் அசீம் அருண் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.