1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:35 IST)

ஆர்ட்டெமிஸ்-1: சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம் இன்று சோதனை - விண்வெளியில் புதிய சகாப்தம்

Artemis-1
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தை இன்று சோதனை செய்ய உள்ளது. இது சந்திர ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். ஆர்ட்டெமிஸ்-1, மனிதனை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியின் முதல் படி.


இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் சிறப்பு, இது எப்படி செயல்படும் என்பது குறித்து இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ். இதை அடைய புதிய விண்கலத்தையும், அதை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல புதிய ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளனர்.

விண்ணுக்குச் செல்லும் ராக்கெட்டின் கட்டமைப்பு

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் உள்ள அடிப்படையான சாதனம் அதன் ராக்கெட். இது எஸ்.எல்.எஸ் (SLS) எனப்படும் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தும் கட்டமைப்பு (Space Launch System) ஆகும். இது பூமிக்கு அப்பால் ஒரு விண்கலத்தை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாடர்ன் வி(Saturn V)க்கு பிறகு எஸ்.எல்.எஸ் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்.

1960கள் மற்றும் 70களில் அப்பல்லோ நிலவுப் பயணங்களுக்கான ராக்கெட் சாட்டர்ன் வி. ஏவுதளத்தில் ஆர்ட்டெமிஸ் I ராக்கெட் 98 மீ (320 அடி) உயரத்தில் நிற்கும். இது பிரிட்டனில் பிக் பென் கடிகார கோபுரத்தை விட இரண்டு மீட்டர் அதிக உயரமாகும்.

சாட்டர்ன் ராக்கெட்டுகளைப் போல, இது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை பூமியிலிருந்து செலுத்தத் தேவையான அழுத்தத்தை ராக்கெட் பூஸ்டர்கள் கொடுக்கின்றன. ஒரு நொடிக்கு ஆறு டன் கன எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இரண்டு நிமிடங்களில் அவை வெளியேற்றப்பட்டு மைய நிலை ராக்கெட் பின்னர் எஸ்.எல்.எஸ் பூமியின் சுற்றுப்பாதையில் தள்ளும்.

மைய நிலை அடிப்படையில் இது ஒரு மாபெரும் எரிபொருள் கொள்கலனாகும். இது -180 செல்சியசை விட குளிரான திரவ வாயுவால் நிரப்பப்படுகிறது. இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லிட்டர் (440,000 கேலன்கள்) திரவ ஹைட்ரஜனையும் 740,000 லிட்டர் (160,000 கேலன்கள்) திரவ ஆக்ஸிஜனையும் எட்டு நிமிடங்களில் எரித்துவிடும். எரிபொருள் வெளியேறியவுடன், மைய நிலை பிரிந்து, விரைவில் அடுத்த அடுக்கு இயந்திரங்கள் ஓரயன் கேப்சூலைச் சுற்றுப்பாதையில்  செலுத்துகின்றன.

நிலவை நோக்கிய பயணம்

இப்போது ஓரயன் விண்கலம் சந்திரனுக்குச் செல்ல நிலைக்கு தயாராகி உள்ளது.

இந்த பயணத்திற்கு சில நாட்கள் எடுக்கும். மேலும் ஓரயன் 70,000 கிமீ (40,000 மைல்கள்) தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செல்ல அதன் த்ரஸ்டர்களைச் (thrusters) செலுத்தும் முன்பு, மேற்பரப்பில் இருந்து 100 கிமீ (60 மைல்) அருகில் வரும். அந்தப் பயணத்தைத் தொடங்க இறுதியாக ஓர் அடுக்கு உள்ளது. - இன்டரிம் கிரையோஜெனிக் ப்ரொபல்ஷன் ஸ்டேஜ் (ஐ.சி.பி.எஸ்) .

ஐ.சி.பி.எஸ். பூமியைச் சுற்றி ஓரயானை விரைவுபடுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதை விண்வெளிக்குத் தள்ளும். இந்தச் செயல்பாடு டிரான்ஸ்-லூனார் இஞ்சக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. ஓரயன் சந்திரனுக்குச் சென்றவுடன் ஐ.சி.பி.எஸ் பிரிந்துவிடும்.

ஓரியன் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: காப்ஸ்யூல் மற்றும் சர்விஸ் மாட்யூல்.