வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2022 (10:01 IST)

அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

USA - Container
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.


நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர் பிழைத்தவர்கள், "தொடுவதற்கே சூடான நிலையில்" இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதை.

ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளில் அவர்களைச் சந்தித்து, ஏற்றிச் செல்ல அடிக்கடி லாரிகளைப் பயன்படுத்துகின்றனர்.

"அவர்களுக்கு குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கான ஒரு சிறந்த வாழ்க்கையைக் கண்டுபிடிக்க முயன்றிருக்கலாம். இதுவொரு பயங்கரமான துயரம்," என்று சான் அன்டோனியோ மேயர் ரான் நிரன்பெர்க் கூறினார்.

அவசரக்கால முதல்நிலை கவனிப்பை வழங்கக்கூடியவர்கள் ஆரம்பத்தில் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் இறந்தவர்களைப் பற்றிய தகவலறிந்த பின்னர், சம்பவ இடத்திற்கு வந்ததாக சான் அன்டோனியோ தீயணைப்புப் பிரிவின் தலைவர் சார்லஸ் ஹூட் செய்தியாளர்களிடம் கூறினார்.

"ஒரு லாரியைத் திறக்கும்போது அதற்குள் நாங்கள் இறந்த உடல்களின் அடுக்குகளைப் பார்த்திருக்கக்கூடாது. நாங்கள் யாரும் அதைக் கற்பனை செய்துகொண்டு வேலைக்கு வருவதில்லை," என்று அவர் கூறினார்.

டிரைவரால் கைவிடப்பட்ட வாகனத்தில் குளிரூட்டும் வசதியில்லை என்றும் அதற்குள் குடிநீர் இல்லை என்றும் அவர் கூறினார்.

KSAT என்ற உள்ளூர் தொலைக்காட்சி சேனலின்படி, சான் அன்டோனியோவின் தென்மேற்குப் பகுதியில் ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் உட்பட ஏராளமான அவசர உதவியாளர்கள் பெரிய லாரியைச் சுற்றியிருப்பதைக் காண முடிந்தது.