1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 19 மே 2022 (12:28 IST)

இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர் கைது

Sri Lanka
இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர், இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய கடற்பரப்பில் புதன்கிழமையன்று (மே 18ஆம் தேதி) நடத்தப்பட்ட விஷேச சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நீண்ட நாள் மீன்பிடி படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதையடுத்து, கடற்படையினர் குறித்த படகை சுற்றி வளைத்து, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட படகில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடொன்றிற்கு பயணிக்க முயற்சித்தவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு பேரும், 12 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் நடத்தப்பட்ட மற்றுமொரு சுற்றி வளைப்பில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இந்த சுற்றி வளைப்பில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இருவரும், 20 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆட்கடத்தல் செய்பவர்கள் அடங்குவதுடன், சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேருமாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.