17ஆம் நூற்றாண்டு எழுத்தாளரின் உடல் எச்சங்களைத் தேட ஸ்பெயின் நடவடிக்கை

Last Updated: திங்கள், 28 ஏப்ரல் 2014 (20:22 IST)
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஸ்பானிய எழுத்தாளரான மிகுயெல் த செர்வான்தெஸின் உடல் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்காக மட்ரிட் நகரத்து மடம் ஒன்றில் தோண்டித் தேடப்போவதாக ஸ்பெயினின் தடயவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
உலகப் பிரசித்தி பெற்ற டான் குவிக்ஸாட் பாத்திரப்படைப்பினை உலகிற்குத் தந்தவர் ஸ்பானிய இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் மிகுயெல் த செர்வான்தெஸ் ஆவார்.
 
1605ஆம் ஆண்டில் இவர் எழுதிய டான் குவிக்ஸாட் என்ற கதைதான் இலக்கிய சரித்திரத்தில் வெளியான முதல் நவீன புதினம் என்று கருதப்படுகிறது.
 
உலகெங்கிலும் மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்டு, மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் அந்தப் புத்தகமும் ஒன்று.
 
நவீன நாவலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் செர்வான்தெஸ், 1616ஆம் ஆண்டு வறுமையில் உழன்று உயிர்விட்டார்.
 
டிரினிடேரியன்ஸ் கான்வெண்ட் என்ற மடத்திலுள்ள தேவாலயத்து தோட்டத்தில் செர்வான் தெஸ் அடக்கம் செய்யப்பட்டார் என்று பதிவாகியிருந்தாலும், அவருடைய கல்லரை எது என்று இதுவரை எவருக்கும் தெரியாது.
 
இந்த இலக்கிய ஜாம்பவானின் உடல் எச்சங்களைக் கண்டுபிடித்து அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என நினைக்கும் ஸ்பெயின் அரசாங்கம், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அவர் புதைக்கப்பட்ட தோட்டத்தை தோண்டப்போவதாக அறிவித்துள்ளது.
 
தோட்டத்து நிலத்தை ஸ்கேன் செய்து, கல்லரையைக் கண்டுபிடித்து, உடல் எச்சங்களைத் தோண்டியெடுத்து, அது மிகுவெல் த செர்வான்தெஸின் உடல் எச்சம்தானா என்று ஆய்வு செய்யப்போவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
திங்களன்று ஆரம்பித்துள்ள இந்த பணியில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஜியோ ராடார் கருவி பூமிக்குள் உடல் எச்சங்கள் எங்கே இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்தும் என்று பணியினை வழிநடத்தவுள்ள லுயிஸ் அவியல் என்பவர் கூறுகிறார்.
 
இந்த பணிக்கு ஒரு லட்சம் யூரோ செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :