அம்பிகையைச் சரண் புகுவோம் - பகுதி 2

Annakannan| Last Updated: வியாழன், 2 அக்டோபர் 2014 (13:17 IST)
சக்தி வழிபாடு வழிமுறைகள்
 
அம்பிகையை, அம்மனை, அன்னையாய்ப் போற்றும் பராசக்தியை நம் இல்லங்களில் வழிபடவும் ஆராதிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன. 
 
இல்லத்தில் சக்தி பூஜை
 
குறைந்தபட்சம் காலை மாலை வேளைகளில் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி முதலிய செம்மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். குறிப்பாகச் செவ்வாய், வெள்ளி இரு தினங்களும் அம்பிகைக்குப் பூஜை செய்ய ஏற்ற தினங்கள். 

 
நிவேதனம்
 
`பாயஸான்னப் பிரியை,‘‘ என்று அன்புடன் அழைக்கப்படும் அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசத்துடன் வடையும் நிவேதனமாக அளிக்கப்படுகிறது.
 
குத்து விளக்குப் பூஜை
 
ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறுகின்றன. திருமணமான பெண்களும், இளம் பெண்களும் குத்து விளக்கேற்றி வைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து குங்குமம், மற்றும் மலர்களால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பூஜிப்பது நன்மை தரும் என்பது நம்பிக்கை. அஞ்ஞான இருளை அகற்றி வாழ்வில் ஒளிபரப்பும் திருவிளக்கைப் பராசக்தி ஸ்வரூபமாகப் பார்க்கிறோம்.
 
ஸ்ரீவித்யா உபாசனை
 
இன்னும் ஒருபடி மேலே போய் அம்பிகையை ஸ்ரீசக்ரவடிவில் அமைத்து, ஸ்ரீவித்யா உபாசகர்களாகத் தினம் நியமங்களின்படி ஆராதிப்பவர்களும் உண்டு. இதற்குத் தேர்ந்த பக்தியும், தினசரி நியமங்களும் மிகவும் தேவை. நன்கு கற்றுத் தேர்ந்த குருவிடம் பயின்ற பின்னரே இவ்வகை ஆராதனை (உபாசனை) செய்ய முடியும். இப்படி ஆழ்ந்த பக்தியுடன் அம்பாளை ஆராதிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளான அனிமா, மஹிமா, பிராப்தி, ஈசிப்தம், வாசிப்தம் போன்றவை நிச்சயம் கை கூடும் என்பது மறைந்த ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாச்சாரியார் அவர்களின் கருத்து.
 
அம்பிகையின் புகழ் பாடும் புலவர்களும் பாடல்களும்


 
தேவி மஹாத்மியம்
 
`` யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!"
 
என்கிறது தேவி மஹாத்மியம். 
 
இதன் பொருள்: 
 
``எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்,"
 
தேவி மஹாத்மியத்தில் சப்தசதி என்ற பிரிவில் 700 சுலோகங்கள் தேவியின் அழகையும் வீரத்தையும் வருணிக்கின்றன. இப்பராசக்திதான் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி என்று விளங்கி பரமனின் பத்தினியாகவும் விளங்குகிறாள் என்றும் அவளே மலை மகளாகவும், கலைமகளாகவும், அலைமகளாகவும், துர்க்கையாகவும் அவதாரம் எடுக்கிறாள் என்றும் மார்கண்டேய புராணத்தில் வரும் தேவி மஹாத்மியம் கூறுகிறது.
 
லலிதா ஸஹஸ்ரநாமமும் ஸெளந்தர்ய லஹரியும்
 
லலிதா ஸஹஸ்ரநாமமும், ஆதிசங்கரர் இயற்றிய ஸெளந்தர்ய லஹரியும் அம்பிகையின் அழகை வர்ணித்து, அவளின் மஹா சக்தியைப் போற்றும் வகையில் இயற்றப்பட்டவை. சக்தி அன்பர்கள் தினமும் போற்றிப் பாடும் முறையில் எளிய நடையில் அமைந்துள்ளவை.
 
பாரதியார்
 
தமிழ்நாட்டில் பல புலவர்கள் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளனர். பராசக்தியைப் போற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார் பாரதியார். எங்கும் எதிலும் நிறைந்திருந்து சர்வ வல்லமை பொருந்தியவளாகவும், அனைத்தும் அறிந்தவளாகவும் விளங்கும் சக்தியை, ``எங்கெங்கு காணினும் சக்தியடா, ``என்று பாடுகிறார் நம் காலத்துத் தமிழ்க் கவிஞர் பாரதியார். தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் பராசக்தியைக் கண்ட மகாகவிஞர் அவன்.
 
அபிராமி அந்தாதி
 
அதுதவிர அபிராமி பட்டர் எழுதிய 100 பதிகங்களடங்கிய அபிராமி அந்தாதியும் இல்லந்தோறும் அம்பிகையின் கருணையைப் போற்றித் துதிக்க ஏற்றது. 
 
காணும் பொருளையெல்லாம் அம்பிகையின் வடிவமாகப் பார்த்து, படைக்கப்பட்ட உயிர்களிலெல்லாம் அவளின் திருவை உணர்ந்து, நீக்கமற நிறைந்துள்ள அந்த ஒளியை இணையில்லா அந்தப் பராசக்தியைச் சரணடைந்து அவளின் கருணைக்கும் அருளுக்கும் பாத்திரமாவோம்.
 
"ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்
தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வார்க்(கு) ஒரு தீங்கில்லையே".


இதில் மேலும் படிக்கவும் :