1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 31 மே 2016 (14:34 IST)

செல்லாது செல்லாது மறுபடியும் எண்ணுங்க : திருமாவளவன் அடம்

காட்டுமன்னார் கோவில் தொகுதிகள் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை மீண்டும் ஒருமுறை எண்ண வேண்டும் என்று விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல். திருமாவளவன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருமாவளவன் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
 
இந்நிலையில் அவர் ராஜேஷ் லக்கானிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட நான் 48,363 வாக்குகள் பெற்றதாகவும், என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 48,450 வாக்குகள் பெற்றதாகவும் அந்த தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்தார். 87 வாக்குகள் குறைவாக பெற்றதாக கூறி எனது வெற்றி தட்டி பறிக்கப்பட்டுள்ளது.
 
இங்கு வந்த 101 தபால் ஓட்டுகள் எண்ணப்படாமல் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். இந்த ஓட்டுக்களை போட்டவர்கள் அதிகாரியிடம் தகுதி சான்றிதழ் பெறவில்லை என்று காரணம் கூறி எண்ணாமல் விட்டு விட்டனர்.
 
வாக்குப்பதிவு செய்யப் பட்ட தாள் எந்த உரையில் இருந்ததோ அதில் தகுதிச் சான்றிதழ் பெற்ற கடிதம் இருக்கும் என்று எடுத்து கூறியும், அதிகாரிகள் அதை கவனத்தில் கொள்ளாமல் எனது கோரிக்கையை புறக்கணித்து விட்டனர். எனவே இதில் அதிகாரிகள் சொல்வதும் காரணம் ஏற்கும் நிலையில் இல்லை.
 
எனவே இந்த தபால் ஓட்டுகளை எண்ணுவதுடன் தொகுதியில் பதிவான அனைத்து ஓட்டுகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
எனது தொகுதியில் கலிய மலை கிராமத்தில் உள்ள 81-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது 30 நிமிட நேரம் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
 
இதே வாக்குப்பதிவு மிஷின் வாக்கு எண்ணும் போது சரியாக செயல்பட வில்லை. 6-வது சுற்று எண்ணும் போது இந்த எந்திரம் கோளாறு அடைந்தது. இதனால் அதில் உள்ள வாக்குகளை எண்ண முடியவில்லை.
 
13-வது சுற்று எண்ணும் போதுதான் அந்த வாக்குப் பதிவு எந்திரத்தை சரி செய்ய ஆட்கள் வந்தனர். அவர்களும் முயற்சி செய்து பார்த்துவிட்டு சரி செய்யமுடியவில்லை என்று கூறி பதிவான வாக்குகளை பிரிண்ட் எடுத்து தந்தனர். எனவே அஞ்சல் ஓட்டு உள்ளிட்ட அனைத்து வாக்கு களையும் மீண்டும் எண்ணு வதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த கடிதத்தின் ஒரு நகலை இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன்  “ சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்தவில்லை. எனவே காட்டுமன்னார் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்று கூறினார்.