வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (11:32 IST)

அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? - பொன்னையன் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை என அதிமுக மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அதிமுக தற்போது அடுத்த தலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதால், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
 
முக்கியமாக, ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யார் ஏற்க போகிறார் என்பது பொதுக்குழுவில் தெரிந்துவிடும். ஜெ.வின் தோழியான சசிகலா அந்த பதவிக்கு முன் மொழியப்படுவார் என ஒருபுறமும், துணை சபாநாயகர் தம்பிதுரையை அந்த பதவியில் அமர்த்த சசிகலா விரும்புவதாக ஒருபுறமும் செய்திகள் வெளியானது. 
 
எனவே, அதிமுகவின் சில அதிகார பதவிகளைப் பெற போட்டிகள் நடப்பதாகவும், இதனால் கட்சிக்குள் கருத்து வேறு பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவியது.
 
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பொன்னையன் “அதிமுகவில் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. பொதுச்செயலாளர் பதவி குறித்து வெளியான அனைத்து தகவல்களும் வதந்தியே. விரைவில் கூட்டப்படும் பொதுக்குழுவில், கட்சியின் பொதுச்செயலாளரை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பார்கள். இதுவரை அந்த பதவிக்கு எந்த போட்டியும் ஏற்படவில்லை. 
 
அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. யாரும் தனித்து முடிவெடுக்க முடியாது. ஜெயலலிதாவிற்கு இத்தனை வருடங்கள் நெருக்கமானவர் என்ற முறையிலும், கட்சியின் முக்கிய உறுப்பினர் என்ற முறையிலும் அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து பேசுகின்றனர். அதில் தவறு ஏதும் இல்லை.
 
அதேபோல், அதிமுகவிற்கு பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.  கற்பனையாக பரப்பப்படும் செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.