Last Updated : புதன், 28 டிசம்பர் 2016 (18:12 IST)
சசிகலாவுக்கு எதிரான ஜெ.தீபா பேரவை கூட்டம் நடத்த தடை
அதிமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு அதரவு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே ஜெ.தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற இருந்த ஜெ.தீபா பேரவை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அடுத்த அதிமுக பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழும்பியது? பின்னர் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச் செயலாளர் பதிவி ஏற்குமாறு வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து சசிகலாவை சின்னம்மா என்றும், அவர் பொதுச் செயலாளராக பதிவி ஏற்க அனைத்து தகுதிகளும் உள்ளது என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் 29ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஒருபக்கம் அதரவு அதிகரித்து வருகிறது.
ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்பதாலும், சசிகலாதான் ஜெயலலிதாவின் மறைவுக்கு காரணம் என்று பரவும் செய்திகளின் அடிப்படையிலும் அதிமுக தொண்டர்கள் சிலர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குழித்தலையில் ஜெயலலிதா தீபா என்ற பெயரில் பேரவை துவங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தீபாவுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். அரங்கத்தின் அதிமுகவினர் திரண்ட நேரத்தில் காவல்துறையினர் திடீரென்று, அரங்க கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சாலையில் திரண்ட அதிமுகவினர் எங்கள் ஆதரவு ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா அவர்களுக்குதான் என்று கோசமிட்டனர். மேலும் மேலிடத்தால் எங்களுக்கு அரங்க கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றனர்.