Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2017 (21:19 IST)
முடக்கப்பட்ட இரட்டை இலை ; ரத்தான இடைத் தேர்தல் ; கடும் கோபத்தில் சசிகலா
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் அவசர செயல்பாடுகள் காரணமாக, அவர் மீது சிறையில் இருக்கும் சசிகலா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தார். அதன் பின் அதிமுகவின் தலைமையாக செயல்பட்டார் தினகரன்.
என்னதான் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும், அவரை பின்னால் இருந்து தினகரனே இயக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நான்தான் நிற்பேன் என அங்கு போட்டியிட்டார் தினகரன். ஓ.பி.எஸ் அணி கொடுத்த குடைச்சலில் இரட்டை இலை சின்னமும், அதிமுக என்ற கட்சி பெயரையும் பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரண் அணி பணப்பட்டுவாடா செய்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால், விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலும் ரத்தானது.
மேலும், வருமான வரித்துறையினரின் லிஸ்டில் முதல்வர் உட்பட தமிழக முக்கிய அமைச்சர்கள் பெயர் இருக்கிறது. அடுத்த சோதனை எங்கு நடக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என தமிழிசை உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையெல்லாம் கேள்விப்பட்டு சசிகலா மிகவும் நொந்து போய் விட்டாராம். சசிகலாவோடு சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் தற்போது பெங்களூரில் தங்கியிருந்து அடிக்கடி சிறைக்கு சென்று அவர்கள் இருவரையும் சந்தித்து பேசி வருகிறார். அவரிடம் புலம்பிய சசிகலா “ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டிருக்கக் கூடாது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கும் என்பது தெரியாமல், இப்படி எல்லோருக்கும் தெரியும் வகையில் பணப்பட்டுவாடா செய்து கட்சியின் மீது மக்களுக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்து விட்டான். ஏற்கனவே, ஓ.பி.எஸ் அணியால் இரட்டை இலை சின்னமும் பறிபோனது. தற்போது தேர்தலும் ரத்தாகி விட்டது. மத்திய அரசிடம் பகைத்துக் கொள்வதால், வருமான வரி சோதனைகளும் அதிகரித்து வருகிறது.
இதற்காகவா நானும் அக்காவும் (ஜெயலலிதா) இவ்வளவு கஷ்டப்பட்டோம். நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளியே வரும் போது கட்சி இருக்குமா என்றே தெரியவில்லை. அவனை என்னை வந்து பார்க்க சொல்” என விவேக்கிடம் புலம்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து தினகரனிடம் தெரிவித்த போது, சசிகலாவை சென்று சந்திப்பது பற்றி உறுதியாக எதுவும் அவர் பதில் கூறவில்லையாம்.