தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், சசிகலா மற்றும் அவரது உறவினர் தினகரன் ஆகியோருக்கும் இடையே நேற்று போயஸ் கார்டனில் நடந்த வாக்குவாதம், ஓ.பி.எஸ்-ஐ மிகவும் அப்செட் ஆக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலாவை அடுத்து முதலமைச்சராக அமர வைக்க வேண்டும் என்பதில் மன்னார்குடி வட்டாரம் குறியாக இருக்கிறதாம். அதற்கு யாரெல்லாம் தடையாக இருப்பார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. முதலில் வந்தது மத்திய அரசு.
ராம்மோகன்ராவ் வீட்டில் சோதனை நடத்தி, மத்திய அரசு கார்டனை மிரட்டி பார்த்த பின்பு, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கும், மன்னார் குடி வட்டாரத்திற்கும் இடையே நெருக்கமாக இருந்த ஒருவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சில உடன்படிக்கை ஏற்பட்டது. மத்திய அரசின் கோரிக்கைகள், கார்டன் தரப்பின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனால்தான், அடுத்தடுத்து அதிரடியாக வெடிக்கும் என எதிர்பார்த்த வருமான வரித்துறை சோதனை தற்போது புஸ்வானம் ஆகி விட்டது.
அடுத்து ஓபி.எஸ். அவர் தன்னுடைய பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்பதில் சசிகலா தரப்பிற்கு சந்தேகம் இருந்தது. அவரை அரசியலில் இந்த நிலைக்கு கொண்டு வந்ததில் முக்கியமானவர் சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன். இருந்தாலும், டெல்லிக்கு சென்று மோடியை சந்தித்து விட்டு வந்த பின், கார்டன் பக்கம் செல்லாமல் இருந்தார் ஓ.பி.எஸ். அதன் பின் சில நிமிடங்கள் மட்டும் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசி விட்டு வந்தார்.
இதனிடையே சசிகலாவிற்கு அவருக்கும் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்தன. எனவே, மன்னார்குடி வட்டாரத்திற்கு எதிராக அவர் செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை சசிகலாவின் துதி பாடினார் ஓ.பி.எஸ். எல்லாவற்றும் மேலாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் காலில் விழுந்து மொத்தமாக சரண்டர் ஆனார். இரண்டாவது விக்கெட் காலி...
அடுத்து தம்பிதுரை. நாடாளுமன்ற துணை சபாநாயகராக உள்ள அவருக்கு டெல்லியில் செல்வாக்கு உள்ளது. எனவே, அவர் சசிகலாவிற்கு எதிராக செயல்படுவாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. எனவேதான், சசிகலாவை முதல் அமைச்சராக்க வேண்டும் என அறிக்கை விடுமாறு கூறப்பட்டதாம். தம்பி துரையும், தன்னுடைய லெட்டர்பேடுலேயே அறிக்கைய வெளியிட்டு, சசிகலாவிடம் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டிக் கொண்டாராம்.
தம்பிதுரையின் அறிக்கையை அடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோட்டைக்கு சென்று ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து பேசினார். இதனால் கடுப்பான சசிகலா தரப்பு உடனடியாக ஓ.பி.எஸ்-ஐ கார்டனுக்கு அழைத்து பேசியது. அப்போது சசிகலாவுடன் இருந்த தினகரன், ஒ.பி.எஸ்-ஐ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஏகத்துக்கும் சாடியுள்ளார். கடைசியில் தன்னுடைய ராஜினாமா கடித்தை சசிகலாவிடம் கொடுத்த ஓ.பி.எஸ் “நான் உங்களுக்கு விசுவாசமாகத்தேன் இருந்தேன். ஆனால் என்னை இப்படி நடத்துகிறீர்கள். இனிமேல் எதற்கும் நான் வரவில்லை. எதற்கும் என்னை அழைக்காதீர்கள்’ என சோகமாக கூறிவிட்டு வெளியேறி இருக்கிறார்.
ஜெயலலிதாவும் தற்போது உயிரோடு இல்லை. மேலும், முதல்வர் பதவியோடு, அதிமுக பொருலாளர் பதவியையும் சசிகலா தரப்பு பறிக்க முடிவெடுத்திருப்பதால், அவர் அதிமுகவில் இருந்து விலகி, புதிய கட்சி தொடங்கலாம். அல்லது அரசியலில் இருந்து விலகலாம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்காக காத்திருக்கிறது தமிழகம்.