பொதுச்செயலாளர் பதவியே போதும் : இறங்கி வரும் ஓ.பி.எஸ் அணி?
எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவதற்காக, தங்களின் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை தளர்த்திக் கொள்ளும் முடிவிற்கு ஓ.பி.எஸ் அணி வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை, சசிகலா குடும்பத்தினைரை கட்சியிலிருந்து நீக்குதல் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழலாகவே பார்க்கப்பட்டது.
எனவே, ஓ.பி.எஸ் ஒரு பக்கம் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால், தற்போது ஓ.பி.எஸ் அணியினர் மீதான செல்வாக்கு மக்களிடையே படிப்படியாக குறைந்து வருவதால், தங்கள் முக்கிய கோரிக்கைகளை விட்டுத்தர ஓ.பி.எஸ் அணி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் எடப்பாடி அணியினருடன் இணைவதே நல்லது. எனவே, முதல்வர் பதவி வேண்டாம். பொதுச்செயலாளர் பதவியே போதும் என்ற முடிவிற்கு ஓ.பி.எஸ் வந்து விட்டார் எனக்கூறப்படுகிறது. மேலும், மாவட்ட, ஒன்றிய அளவிலுள்ள கட்சி பொறுப்புகளில் சிலவற்றை கேட்டுப்பெறுவோம் என ஓ.பி.எஸ் அணி முடிவெடுத்துள்ளதாம்.
ஓ.பி.எஸ் அணி இறங்கி வர முடிவெடுத்திருப்பதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.