வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (13:41 IST)

ஒ. பன்னீர்செல்வம் கூடாது; ஜெயலலிதாதான் போக வேண்டும் - விஜயகாந்த் வேண்டுகோள்

அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வத்தை அனுப்பாமல், முதலமைச்சர் ஜெயலலிதா நேரடியாக கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
 
10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 11-வது கூட்டமாக மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரில் கலந்து கொண்டு தமிழக பிரச்சனைகளை அந்த அவையில் எடுத்துரைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டுப்பெற வேண்டும். 
 
எப்போதும் போல் ஒ.பன்னீர்செல்வமோ அல்லது அரசு சார்பாக ஒரு நபரையோ அனுப்பாமல், முதலமைச்சரே நேரடியாக கலந்து கொண்டு மாநிலங்களுக்கிடையேயான உறவு, பொருளாதார திட்டங்கள், பள்ளி கல்வி விவகாரம், நேரடி மானிய திட்டம், தமிழ்நாட்டின் பாதுகாப்பு, தமிழ் மொழிக்கு முக்கிய அங்கீகாரம், கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை போன்ற பல முக்கிய அம்சங்களை தமிழக மக்களுக்காக எடுத்துரைத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, இந்த ஆலோசனை கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
 
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை தனியாக டெல்லியில் சந்தித்த ஜெயலலிதா, தமிழக பிரச்சனைக்காக சந்தித்தார் என்று தொலைக்கட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் வந்தபோது, அவர் தன் சொந்த பிரச்சனைக்காகவே பிரதமரை சந்தித்தார் என்று அரசியல் ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
 
தன் சொந்த பிரச்சனைக்காக ஜெயலலிதா, மோடி அவர்களை சந்தித்தது ஒரு புறம் இருக்க, தமிழகத்திற்காக இந்த ஆலோசனை கூட்டத்தை ஜெயலலிதா அவர்களே நேரடியாக கலந்து கொண்டு, தமிழகத்திற்கு நன்மை பயத்திட வேண்டும்" என கூறியுள்ளார்.