1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (10:30 IST)

திமுக, அதிமுகவால் மதிமுகவை அழிக்க முடியாது - வைகோ ஆவேசம்

திமுக, அதிமுகவால் மதிமுகவை அழிக்கவோ, சேதப்படுத்தவோ முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
 

 
தஞ்சையில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேர்தல் தோல்வி பற்றி கவலைப்படவில்லை. தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்க, மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற மக்கள் பிரச்சனைகளை எடுத்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
 
பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை மக்களை கவலை அடைய செய்துள்ளது. நீதிபதிகளும் கவலையை தெரிவித்துள்ளனர். பெண்களை அச்சுறுத்தும், மிரட்டும் செயலால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.
 
சேலம் இளம்பெண் வினுப்பிரியா தற்கொலை சம்பவத்தில், தனது படத்தை மார்பிங் செய்து முகநூலில் வெளியிட்டது குறித்து அந்த பெண் புகார் கொடுத்த உடன் போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் ஒரு உயிர் பிரிந்திருக்காது.
 
எனவே இதில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 4 கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.
 
திமுக, அதிமுகவால் மதிமுகவை அழிக்கவோ, சேதப்படுத்தவோ முடியாது.
 
என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என எச். ராஜா கூறி உள்ளார். இன்னொரு வழக்கு தொடர்ந்தாலும் அதையும் சந்திக்க தயாராக உள்ளேன். எச். ராஜா போன்றோருக்கு எல்லாம் நான் பதில் செல்ல போவதில்லை” என்றார்.