திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (15:51 IST)

விஜயபாஸ்கருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி - தினகரனுக்கு நெருக்கடி

சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக முக்கிய அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.5 கோடி பணமும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியது.
 
இதனையடுத்து, அது தொடர்பாக விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக விளக்கம் அளித்தனர்.
 
அந்நிலையில், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் எழுந்தது. விஜயபாஸ்கரை அழைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தியதாகவும், ஆனால், அதற்கு விஜயபாஸ்கர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதேபோல், விஜயபாஸ்கரை நீக்கம் செய்யவில்லை என தினகரன் பேட்டி கொடுத்தார்.ஆனால், அவரை நீக்காவிட்டால் தமிழக அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவி எந்நேரமும் பறிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.


 

 

இந்நிலையில், வருகிற 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த 20க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அமைச்சர்களின் பலரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கும். இதனால் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் முறையிட்டதாக தெரிகிறது.
 
எனவே, அதிருப்தி அமைச்சர்களுடன் தினகரனை இன்று சந்தித்த தம்பிதுரை, இதுபற்றி அவருடன் விவாதித்தாக தெரிகிறது. எனவே, நெருக்கடிகள் அதிகரித்து கொண்டே வருவதால், என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் தினகரன் தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.