ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (09:10 IST)

சத்தியம் செய்த அமைச்சர்கள் - சபாஷ் கூறிய சசிகலா

முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அதிமுக தற்போது அடுத்த தலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


 

 
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதால், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
 
முக்கியமாக, ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யார் ஏற்க போகிறார் என்பது பொதுக்குழுவில் தெரிந்துவிடும். ஜெ.வின் தோழியான சசிகலா அந்த பதவிக்கு முன் மொழியப்படுவார் என ஒருபுறமும், துணை சபாநாயகர் தம்பிதுரையை அந்த பதவியில் அமர்த்த சசிகலா விரும்புவதாக ஒருபுறமும் செய்திகள் வெளியானது.
 
எனவே, அதிமுகவின் சில அதிகார பதவிகளைப் பெற போட்டிகள் நடப்பதாகவும், இதனால் கட்சிக்குள் கருத்து வேறு பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவியது.
 
அதிமுகவில் சசிகலா எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் அவரது ஆலோசனை படிதான் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதை உறுதிசெய்யும் வகையில் நேற்று முன்தினம் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மூத்த ஆமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின், நேற்று மீண்டும் அவருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
 
அப்போது “எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அனைவரும் ஒற்றுமையோடு அம்மா விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம்” என்று உறுதிபட கூறினார்களாம். இதைக் கேட்டு சசிகலா அவர்களை பாராட்டினாராம். 
 
அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, செங்கோட்டையன், மு.தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.