1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 13 ஜூலை 2016 (16:56 IST)

விஜயகாந்திற்கு அடுத்த சோதனை! - ரூ. 500 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ புகார்

விஜயகாந்த் கட்சியின் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.500 கோடியை முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் எம்எல்ஏவும், மக்கள் தேமுதிக நிர்வாகியுமான எஸ்.ஆர்.பார்த்திபன் புகார் கூறியுள்ளார்.
 

 
தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த சந்திரக்குமார் தலைமையில், கும்மிடிபூண்டி சி.எச்.சேகர், தேமுதிக துணை செயலாளர் தேனி முருகேசன், மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களும், 10 மாவட்டச் செயலாளர்களும் கட்சியிலிருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினர்.
 
பின்னர், திமுகவுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து திமுகவுடன் இணைவது என்று மக்கள் தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், முன்னாள் தேமுதிக எம்எல்ஏவும், மக்கள் தேமுதிக நிர்வாகியுமான எஸ்.ஆர்.பார்த்திபன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது முறைகேடு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், ”தேமுதிக அறக்கட்டளை நிதியில் ரூ.500 கோடியை விஜயகாந்த் முறைகேடு செய்துள்ளார். விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் அறக்கட்டளை நிர்வாகியாக நியமிக்கப்படவில்லை.
 
ரூ.500 கோடி தொடர்பாக விஜயகாந்த் வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டல் வழக்கு தொடரப்படும். வறுமையை ஒழிப்போம் என்ற விஜயகாந்த், வறுமையை மட்டுமே தொண்டர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.