1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (06:38 IST)

விஜயபாஸ்கர் ஒரு பார்ட் டைம் மினிஸ்டர்: ஃபேஸ்புக்கில் கலாய்த்த மு.க.ஸ்டாலின்

திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனத் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் பதிவில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை பார்ட் டைம் மினிஸ்டர் என்றும், ஊழல் புகார்களை சமாளிப்பதுதான் அவரது முழுநேர பணி என்றும் கலாய்த்துள்ளார். இதோ மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பதிவு:



 
 
டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது”, என்ற உண்மைத் தகவலை டெல்லியில் பேட்டியளித்த தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். “தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடைய வேண்டியதில்லை”, என்று சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய்யென இப்போது சுகாதாரத்துறைச் செயலாளரின் பேட்டி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு நீடிக்காது’ என்பார்கள். ‘குதிரை பேர’ அ.தி.மு.க அரசில் ‘குவாரி முதல் குட்கா’ வரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் அளித்த பதிலின் புளுகும் சாயமும் வெளுத்துப் போய்விட்டது.
 
தமிழகத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றும் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் நாங்கள் எச்சரிக்கை மணி அடித்தாலும் ஊழல் மயக்கத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காதில் விழவில்லை. 
 
ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரால் சுகாதாரத்துறையை முழுநேரப் பணியாகக் கவனிக்க முடியவில்லை. அவர் ஒரு ‘பார்ட் டைம் மினிஸ்டர்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இன்றைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் டெங்கு பீதியடைந்திருக்கிறார்கள்.
 
இதனால் ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டது. இந்நிலையில் அரசு மருத்துமனைகளில் டெங்கு பாதிப்பிற்காக அட்மிட் ஆகியிருப்பவர்களை விட தனியார் மருத்துவனைகளில் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று அதிர்ச்சி தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
ஆகவே, இனியும் வேடிக்கைப் பார்க்காமல் சுகாதாரத்துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ‘அது அமைச்சரின் இலாகா. நமக்கு என்ன கவலை’, என்று மக்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தமிழக மக்களைக் குலை நடுங்க வைத்துள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, டெங்கு பாதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.'' 
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.