நாங்க வீட்டுக்குப் போகனும் - தினகரனிடம் அடம் பிடிக்கும் எம்.எல்.ஏக்கள்
சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள், தங்களின் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக தினகரனிடம் அடம் பிடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 19 எம்.எல்.ஏக்கள் முதலில் பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசாட்டில் தங்க வைத்தனர். அதன்பின் அங்கிருந்து சென்னை வந்த ஜக்கையன் எம்.எல்.ஏ, எடப்பாடி அணிக்கு தாவினார். எனவே, மீதமுள்ள 18 எம்.எல்.ஏக்களை, கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தினகரன் தங்க வைத்துள்ளார்.
செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகிய மூவர் மட்டும் அங்கு தங்கியிருக்கவில்லை. இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தன்பால் தகுதி நீக்கம் செய்தார். மேலும், அவர்களின் தொகுதிகளும் காலி என அரசு ஆணையில் அறிவிக்கப்பட்டது.
இது தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவி போன கோபம் மற்றும் சோகத்தில் அவர்கள் தினகரனை சந்திக்க விரும்பியதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று கர்நாடக மாநிலம் சென்ற டிடிவி தினகரன், அவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போதும், விடுதியில் இருந்தது போதும். எங்களால் இங்கே இருக்க முடியவில்லை. நாங்கள் வீட்டிற்கு செல்கிறோம் என பலரும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், வருகிற அக்டோபர் 4ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனவே, அதுவரை இங்கே தங்கியிருங்கள் என தினகரன் அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.