ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (10:26 IST)

'இன்னோவா சம்பத்' பெயர் வேண்டாம் ; காரை ஒப்படைத்து விட்டேன் : நாஞ்சில் சம்பத் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை கட்சியிடமே ஒப்படத்து விட்டேன் என அதிமுக பிரச்சார பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் நாஞ்சில் சம்பத் அரசியலில் அதிகம் தலை காட்டவில்லை. மேலும், ஜெ.வின் மரணத்தில் தனக்கும் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து பரபரப்பை கிளப்பினார். அதன் பின் அவர் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், ஜெயலலிதா தனக்கு அளித்த காரை கட்சியிடமே ஒப்படைத்து விட்டேன் என அவர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள் கூட பயன்படுத்தவில்லை . 
 
பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும்.  இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.