புகார் கொடுத்தவர் யார் என்றே தெரியாது: தீபா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அரசியல் வாரீசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெ.தீபா, அவர் அடுத்தடுத்து எடுத்த சொதப்பலான நடவடிக்கை காரணமாக இன்று அவருடைய கணவர் மாதவன் உள்பட அனைவரும் அவரை அரசியல் அனாதையாக்கிவிட்டனர். இந்த நிலையில் தீபா ரூ20 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா, பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் செலவு ஆகியவை மூலம் ரூ.20 கோடி மோசடி செய்ததாக அவர் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் தீபா வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது
ஆனால் தன்மீது புகார் கொடுத்தவர் யாரென்றே தனக்கு தெரியாது என்றும், பேரவையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், தன்மீதான குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் செல்லமாட்டேன் என்று கூறிய தீபா, தன்னை அரசியலில் இருந்து விரட்ட சதி நடக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார்