திடீர் திருப்பம் ; அதிமுவிலிருந்து ஒதுங்கி விட்டதாக தினகரன் பேட்டி
அதிமுக கட்சியிலிருந்து விலகி விட்டதாக தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆட்சியை காப்பாற்ற, அதிமுக கட்சியை காப்பாற்ற, இரட்டை இலை சின்னத்தை மீட்க என பல காரணங்களை கூறி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை அதிமுகவில் இருந்து முற்றிலுமாக நீக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் நேற்று இரவு அதிரடி முடிவெடுத்தனர்.
மேலும், ஓ.பி.எஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நான் நேற்று இரவே கட்சியிலிருந்து விலகி விட்டேன் என தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது:
நேற்று இரவு தாங்கள் எடுத்த முடிவு பற்றி எனக்கு தொலைபேசி மூலமாக செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்தனர். எனவே, நேற்று இரவே நான் கட்சியிலிருந்து விலகி விட்டேன். அதிமுகவில் இருந்து விலகுவதால் எனக்கு வருத்தமில்லை. யாருக்கும் போட்டியாக செயல்பட்டு கட்சிக்கும் பிளவு ஏற்படுத்த வில்லை. என்னால் கட்சி, ஆட்சிக்கும் எந்த பிரச்சனையும் வராது. அவர்களுக்கு எதிராக போட்டி கூட்டம் எதுவும் நடத்த விருப்பமில்லை.
ஆனால், இத்தனை நாட்களாய் உடனிருந்தவர் தீடிரெனெ இப்படி ஏன் முடிவெடுத்தார்கள் எனக்கு தெரியவில்லை. ஏதோ பயம் மற்றும் நெருக்கடியில் இப்படி முடிவெடுத்துள்ளனர். என்ன நீக்குவதால் கட்சிக்கும் நன்மை நடக்கும் எனில் நடக்கட்டும். கட்சியோ, ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். அதேபோல், என் பலத்தை காட்ட வேண்டும் என சண்டை போட எனக்கு விருப்பமில்லை...
ஆனால், இவர்களின் முடிவு கட்சிக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதும், அமைச்சர்கள் யாரும் பயப்பாடாமல் ஆட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
நான் தற்போது அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறேன். அது எனக்கு பொதுச்செயலாளர் சசிகலா கொடுத்த பதவி. எனவே, அவரை கேட்டு விட்டுதான் ராஜினாமா செய்வது பற்றி முடிவெடுப்பேன்” என அவர் கூறியுள்ளார்.