தேமுதிக நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன் : சந்திரகுமார் அதிரடி
ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் தன்னுடன் பேசி வருவதாகவும், எனவே மக்கள் தேமுதிக விரைவில் வலுப்பெறும் என்று மக்கள் தேமுதிக நிறுவனர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
விஜயகாந்தின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் சந்திரகுமார். அதன்பின் விஜயகாந்த் அரசியலில் இறங்கியபோது, அவருடன் பயணித்தார். தேமுதிகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், தேமுதிகவின் கட்சிக் கொறடாவாகவும் செயல்பட்டார்.
2011ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரகுமார், நடந்து முடிந்த சட்டபை தேர்தலுக்கு முன் தேமுதிகவிலிருந்து விலகினார். விஜயகாந்த் தவறான கூட்டணி அமைத்ததாகவும், அதில் விருப்பமில்லாமல் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும் சந்திரகுமார் அறிவித்தார்.
அவருடன் எஸ்.ஆர். பார்த்திபன், சேகர் ஆகியோர் தேமுதிகவிலிருந்து வெளியேறினர். மேலும், சந்திரகுமார் உட்பட அவர்கள் அனைவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.
மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை உருவாக்கி, திமுகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். அவர்கள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவும் படு தோல்வி அடைந்தது. விஜயகாந்த் உட்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், தேமுதிக நிர்வாகிகள் தன்னை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், அவர்களை ஒருங்கிணைத்து மக்கள் தேமுதிகவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்திரகுமார் தெரிவித்தார்.
எனவே, தேமுதிக நிர்வாகிகள் ஏராளமனோர், தேமுதிகவிலிருந்து வெளியேற இருக்கிறார்களா என்று தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.