சிறப்புகள் நிறைந்த மஹாளய அமாவாசையில் செய்ய வேண்டியவை....!

வருடந்தோறும் வரும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்திதனரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை சிறப்பானது. அதிலும் மஹாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மஹாளய அமாவாசை தினத்தன்று வீட்டை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு சிராத்தம் தர்ப்பணம் ஆகியவைகளை கொடுத்து விடுவது நல்லது. மறைந்த  முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் இருந்தால், அவர்கள் சிராத்தம் கொடுப்பது சிறந்தது. ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவர்கள்  வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்கலாம். 
 
இந்த அமாவாசை தினத்தில் சிராத்தம் கொடுக்க வேண்டிய ஆண்கள் முடிவெட்டுதல், முகசவரம் போன்றவற்றை செய்ய கூடாது. மஹாளய  அமாவாசை தினத்தன்று மறைந்த நமது பித்ருக்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே  அன்றைய தினத்தில் உங்கள் வம்சத்தின் மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும்.
நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மஹாளய அமாவாசையின் போது அவர்களுக்கு சிறப்பு ஹோமங்கள்,யாகங்களை செய்யலாம். அனைவரும் தேவர்கள், பித்ருக்களின் கடன்களில் இருந்து விடுபட தகுந்த பூஜைகளை செய்ய  வேண்டும். அதிலும் பித்ருக்களின் அனுக்கிரகத்தை பெற தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை செய்ய வேண்டும். தர்ப்பணம் புரிவோர் நதி  அல்லது குளத்தில் நீராட வேண்டும். 
 
காசி, பத்ரிநாத், திருக்கோகர்ணம், திலதர்பணபுரி,காவிரி சங்கமம், கயா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கும்பகோணம் மகாமக குளம், இராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் மிகவும் விசேஷமானது. 
 
புண்ணியம் மிகுந்த இத்தினத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகள், புலால் உணவுகள், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிவது, போதை பொருட்கள் உபயோகிப்பது போன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
 
இந்த நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அளிக்கும் முன்பு பிறரின் இல்லங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்கான திதியை கொடுத்த பிறகு இறந்து விட்ட உங்களின் உறவினர்கள், நண்பர்கள் இன்ன பிறருக்கும் சிராத்தம் கொடுப்பது உங்களுக்கு மிகுந்த  புண்ணியத்தை பெற்று தரும் செயலாக இருக்கும். 
 
பித்ருக்கள் நம் மீது ஆசிகளை பொழியும் இந்த நன்னாளில் பித்ரு சிராத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தும், அதை செய்யாமல்  தவிர்ப்பவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :