1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2016 (09:56 IST)

ரஷிய கர்ப்பிணி பெண்ணை தாக்கிய ஸிகா வைரஸ்

ரஷிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸிகா வைரஸ் தாக்கி உள்ளதை அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். பிற பெண்களுக்கு பரவாத வகையில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.


 
 
ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய ஸிகா வைரஸ் பிரேசிலில் இருந்து மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும், கரீபியன் நாடுகளுக்கும் வேகமாக பரவியது. பின்னர், உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. தற்போது, அந்த வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
 
கொலம்பியாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட சுமார் 20 ஆயிரம் பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது அந்நாட்டு அரசால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 
டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு சென்று வந்துள்ள 36 வயதான ரஷிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸிகா வைரஸ் தாக்கி உள்ளதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் பிறருக்கு பரவாத வகையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இந்த ரஷிய சுகாதார மந்திரி வெரோனிக்கா நேற்று உறுதி செய்துள்ளார்.
 
உலகம் முழுவதும் பரவி வரும் ஸிகா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு கடந்த 1ஆம் தேதி சர்வதேச ஸிகா வைரஸ் அவசர நிலை பிரகடனம் செய்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.