புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (08:24 IST)

முடக்கப்பட்ட பேஸ்புக் கணக்கு; கேஸ் போட்ட நபருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு!

தனது பேஸ்புக் கணக்கு காரணமின்றி முடக்கப்பட்டதாக பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



உலகம் முழுவதும் மக்கள் பலரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமானது பேஸ்புக். அதிகமான பயனாளர்கள் உள்ள நிலையில் பதிவுகள் இடுவதற்கு பேஸ்புக் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அந்த விதிகளை மீறினால் பேஸ்புக் அந்த பயனரின் கணக்கை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்க முடியும்.

ஆனால் பல சமயம் பேஸ்புக் சரியான காரணமின்றி பயனர்கள் கணக்கை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த ஜேசன் க்ரவ்போர்ட் என்பவரின் பேஸ்புக் கணக்கு கடந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் கேட்டபோது அவர் சிறுவர் ஆபாச பதிவுகளை இட்டதாக பேஸ்புக் விளக்கம் அளித்தது. தான் அவ்வாறு எந்த பதிவும் செய்யவில்லை என்றும் அவர் கூறியும் அதற்கு பேஸ்புக் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில்தான் ஜேசன் க்ரவ்போர்ட் நீதிமன்றத்தில் இதுகுறித்து பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ஜேசன் க்ரவ்போர்ட் தவறான பதிவை இட்டதாக பேஸ்புக்கால் எந்த ஆதாரத்தையும் காட்ட இயலவில்லை. இதனால் ஜேசன் க்ரவ்போர்டின் கணக்கை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என்றும், அவருக்கு 50 ஆயிரம் டாலர்களை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Edit by Prasanth.K