24 பேர்களுடன் பயணமான தென்கொரியா சரக்கு கப்பல் திடீர் மாயம்!
கடந்த சில ஆண்டுகளாக விமானங்கள் மாயமாய் மறைந்து அவற்றை கண்டுபிடிக்கவே முடியாத நிலை ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் 24 பேர்களுடன் பயணம் செய்த தென்கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்று திடீரென மாயமாகியுள்ளது.
தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பிரேசில் நாட்டில் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு நியூசிலாந்து அருகே உள்ள மார்சல் தீவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 16 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டு ஊழியர்களும்,, 8 தென் கொரியா நாட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.
இந்த கப்பல் தென் அமெரிக்க கண்டத்தை தாண்டி உருகுவே பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கப்பல் மாயமாகி விட்டது. கப்பல் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கப்பலை மீட்க அந்த பகுதிக்கு மீட்பு படையினர் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் கடலில் பாதுகாப்பு சாதனத்துடன் மிதந்து கொண்டு இரண்டு ஊழியர்கள் மயக்க நிலைஇல் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் விழித்தெழுந்தால்தான் கப்பலின் நிலை தெரியவரும். கப்பலின் 22 ஊழியர்கள் என்ன ஆனார்கள் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.