புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:27 IST)

ராணுவத்திற்கு எதிராக புரட்சி; துண்டிக்கப்பட்ட இணைய சேவை! – என்ன நடக்கிறது மியான்மரில்?

மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் நடந்த மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ராணுவம் ஜனநாயக கட்சி முக்கிய தலைவர்களை கைது செய்துள்ளதுடன், மியான்மரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ஆயுதமேந்திய போர் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலாக மியான்மரின் பல பகுதிகளிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நடந்து வரும் இந்த அதிகார மீறலான ராணுவ ஆட்சியை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா சபையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.