செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (12:48 IST)

170 கி.மீ. வேகத்தில் ஜப்பானை மிரட்ட இருக்கும் லயன்ராக் புயல்

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
வடகிழக்கு ஜப்பானில் முன்னர் சுனாமி தாக்கிய அதே பகுதியில்  மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் லயன்ராக் புயல் கரையை கடக்க உள்ளது. இந்த புயலினால் அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  
 
இதன் எதிரொலியாக 110 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் பிரபலமான டோயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புகுஷிமா அணு மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தியும் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி தாக்கிய பகுதிகளை இந்த ‘லயன்ராக்’ புயல் இன்று மணிக்கு சுமார் 170 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையினர் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.