எந்த மாதத்தில் வீடு கட்டும் பணியை தொடங்குவது நல்லது...?
கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும்.
மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்யவேண்டும்.
வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு.
தெற்கு திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களைத் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் தொடங்குவதைத் தவிர்க்கவேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.
திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு ஜாதகம் பார்ப்பது போன்று, வீடு கட்டும் விஷயத்திலும் ஜாதகம் பார்த்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கான வேளை வந்துவிட்டதா என்பதில் தொடங்கி, பல விவரங்களையும் தெரிந்துகொண்டு அதில் ஈடுபடுவது சிறப்பு.
அதேபோன்று வீட்டுக்காக வாங்கும் நிலத்தையும் உத்தமமானதாக தேர்வு செய்ய வேண்டும். உண்டு புசிக்கத் தகுந்த காய், கனிகளைத் தரக்கூடியதும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதுமான செடி-கொடிகளும் வீடு வாங்கும் பகுதியில் இருக்கவேண்டும். வேம்பு மாதிரியான பால் சுரக்கும் விருட்சங்கள் அங்கு இருப்பது கூடுதல் விசேஷம்.