புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (13:19 IST)

மகரம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

கிரகநிலை: ரண, ருண, ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்: கல்விமான் என்று பலராலும் பாரட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும்  அபரிமிதமாக அமைந்திருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள்  உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள்.  வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
 
குடும்ப நிர்வாகத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர்கள் நீங்கள்.  எதிரிகளைச்  சமயம் பார்த்திருந்து கவிழ்த்து விடுவதிலும் தயங்க மாட்டீர்கள். ஜோதிடம், வாஸ்து போன்றவற்றிலும் எழுத்துத் துறையிலும் சிறந்த ஞானஸ்தர்களாக விளங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று குதூகலமாக காலத்தைக் கழிப்பீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். புது  வீடு, வாகனம் ஆகியவைகளை வாங்குவீர்கள்.
 
தொழிலில் நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான  லாபமும் உண்டாகும். பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு  செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். 
 
உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமாதலால் மறைமுக வருமானங்கள் போன்ற தனிப்பட்ட சலுகைகள்  உங்கள் பொருளாதார நிலையைப் பெருமளவில் உயர்த்தி விடும். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில்  அமர்ந்து விடுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள்  பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி,  உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள்  பொறுப்பு.  சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். 
 
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச்  சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப்  பாராட்டுவார்கள். 
 
பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். சிலர்  விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப்  பெற்று மகிழ்வீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள்  வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். 
 
உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்: இந்த் மாதம் நீண்ட காலமாக மனத்தில் இருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். பணப்புழக்கத்தில்  திருப்திகரமான நிலை இருந்து வரும். வாகனவசதிகள் சிலருக்கு அமையக்கூடும். மாண்வமணிகள் சிறப்பான முன்னேற்றம் பெற்று சாதனை  படைக்கக்கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும். அவ்வப்போது ஏற்படக் கூடிய சிறு  சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவதே நன்மை தரும். உடல் நிலையில் பிரச்சனை எதுவும் இராது என்பதால் மருத்துவச்  செலவுகள் குறையும். 
 
திருவோணம்: இந்த மாதம் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது  வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். 
 
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய  நிலை உண்டு. பெண்களால் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எல்லா வகையிலும் பலரும்  பொறாமை கொள்ளும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
 
பரிகாரம்: பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம்  அதிகரிக்கும். “ஓம் கம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 11, 12.