கோச்சடையானுக்கு கேளிக்கை வரிவசூல் - இறுகும் நீதிமன்ற பிடி
கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கேளிக்கை வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் சென்னை தேவி திரையரங்கு தவிர மற்ற திரையரங்குகள் கேளிக்கை வரியையும் சேர்த்து பொதுமக்களிடம் வசூல் செய்தனர். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் எர்ணாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்தையா.
அவர் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு -
தமிழ் பெயர்கள் கொண்ட மற்றும் பழைய தமிழ் திரைப்படங்கள்இ தமிழ் கலாசாரம் மற்றும் மொழியை வளர்க்கும் தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து கடந்த 2011-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இடைக்காலத் தடையால் தெனாலிராமன் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கோச்சடையான் திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து மே 12-ஆம் தேதி தமிழக அரசு ஒரு புதிய ஆணை வெளியிட்டது. பிரதான அரசாணையின் மீது இடைக்காலத் தடை நீடிக்கும் நிலையில் கோச்சடையான் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க முடியாது. எனவே, கோச்சடையான் படத்துக்கு வரிவிலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட மே 12 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தேன்.
இந்த மனு கடந்த மாதம் 22-ஆம் தேதி விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கோச்சடையான் படத்துக்கு வரிவிலக்கு அளித்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். அதனால், திரையரங்க உரிமையாளர்கள் பொதுமக்களிடமிருந்து கேளிக்கை வரியை கட்டணமாக வசூலிக்க முடியாது.
எனவே, அரசாணைப்படி வரிவிலக்கு அளிக்கப்பட்ட பிறகு, பொதுமக்களிடமிருந்து எந்த ஒரு வரியயையும் வணிக வரி மற்றும் பதிவுத் துறை, திரையரங்க உரிமையாளர்கள் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
ஆனால், தேவி திரையரங்கத்தைத் தவிர இதர அனைத்து திரையரங்குகளிலும் வழக்கம்போல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கேளிக்கை வரியை வசூலிக்க வணிக வரித்துறையினர் தடை விதிக்கவில்லை.
எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர், வணிக வரித் துறையின் ஆணையர் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும்.
- என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவு பின்பற்றப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டனர்.