வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - நடிகர் விவேக்
‘வைரமுத்து மன்னிப்பு கேட்பதும், அந்தப் பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு’ என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். வைரமுத்து ஆண்டாளைப் பற்றி தவறாக எழுதியதாக கடந்த சில நாட்களாக சர்ச்சை வெடித்து வருகிறது. வைரமுத்துவை மட்டுமல்லாமல், அவர் குடும்பத்தையும் இழிவாகப் பேசிவருகிறார் பாஜகவின் தேசிய செயலாளரன எச்.ராஜா.
‘விஷயம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் யாருக்காவது மணம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என வைரமுத்துவும், ‘அவர் தவறை உணர்ந்து கொண்டால் வைரமுத்துவைத் திட்டியதற்கு நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என எச்.ராஜாவும் கூறிவிட்டனர்.
இந்நிலையில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “தமிழுக்கும், இலக்கியத்துக்கும், திரைப்பாடலுக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் படைத்த ‘மரங்கள்’ கவிதை, வனங்களின் தேசிய கீதம்.
அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள், இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளிநாட்டில் எழுதிய கட்டுரை, தேவையற்றது. கவிப்பேரரசு மன்னிப்பு கேட்பதும், அந்தப் பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு” என விவேக் கூறியுள்ளார்.