செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:13 IST)

சூர்யா நடிப்பில் உருவாகும் 'சூர்யா 45' ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும்  ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய   புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' படத்தைப் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
 
தற்போதைய நிலையில் பெயரிடப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை  மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய,  நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
 
ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர்  RJ பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பக்கா என்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான  இடங்களை  பல இடங்களுக்குச் சென்று தேர்வு செய்து வருகிறார்.
 
ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட ஆஸ்கர் விருது நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மானும் சூர்யாவும் இதற்கு முன்பு ’சில்லுனு ஒரு காதல்’, ’ஆயுத எழுத்து’ மற்றும் '24' போன்ற கிளாசிக் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர்-இசையமைப்பாளர் ஜோடியின், இந்த புதிய படத்தின் பாடல்களும் இசை ஆர்வலர்களின்  மத்தியில் ஆட்சி செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  
 
RJ பாலாஜி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இந்த  திரைப்படத்திற்காக, பல திறமையான பிரபல கலைஞர்களை இப்படத்தில் இறுதி செய்து வருகின்றனர்.
 
நவம்பர் 2024-ல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 
இப்படத்தில் நடிக்கவுள்ள  நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு  விரைவில் வெளியாகும்.