வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (15:08 IST)

விமானத்தில் தொழிலாளர்களை அனுப்பிய வில்லன் நடிகர்!

நாடு முழுவதும் ஊரடங்கினால் வெளிமாநில தொழிலாளர்கள் கால்நடையாக செல்லும் நிலையில் அவர்களில் சிலரை தனிவிமானத்தில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளார் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு நான்கு கட்டங்களாக மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார். இவர் தமிழில் ஒஸ்தி உள்ளிட்ட படங்களிலும், மேலும் தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் பல படங்களிலும் வில்லனாக நடித்தவர். கேரளாவில் சிக்கியுள்ள 177 வெளிமாநில பெண் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தனிவிமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கொச்சியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வருக்கு செல்லும் இந்த விமானத்தில் செல்லும் தொழிலாளர்கள், அங்கிருந்து பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சோனு சூட் “சொந்த கிராமங்களுக்கு மக்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்வதை பார்க்கும்போது என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.