1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (15:57 IST)

நீலகிரியில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடையாக இருக்கும் இடைத்தரகர்கள்: இயக்குனர் ஜாய் மேத்யூ புகார்

ஊட்டி பிலிம் சங்கம் மூலம் தெற்காசிய அளவிலான குறும்பட விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் சிறந்த 90 குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. விழாவில் கலந்துகொண்ட கேரளாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ நேற்று ஊட்டியில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில், "நீலகிரி மாவட்டம் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாகும். பல மலையாள திரைப்படங்களை ஊட்டியில் படமாக்கி உள்ளேன். இப்போது ஊட்டிக்கு தயாரிப்பாளர்கள் வருகை குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வுதான் காரணம், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி பெற பல நபர்கள் இடைத்தரகர்ளாக செயல்பட்டு அதிகாரிகளுக்காக அதிக பணத்தை கேட்பது முக்கிய காரணம் ஆகும்.
 
இந்த விவரங்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் நான் தெரிவித்தேன். தமிழக அரசு நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் வகையில், மாவட்ட கலெக்டர், உயர் வன அதிகாரி மற்றும் நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து படப்பிடிப்புக்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உடனடியாக அனுமதி பெறும் பொருட்டு வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் ஊட்டிக்கு அதிகமான சினிமா தயாரிப்பாளர்கள் வருவார்கள்" என்றார்.