செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2015 (11:21 IST)

ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன்; கமலின் கருத்தை மதிக்கிறேன் - தடாலடி சீமான்

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தின் தலையாயப் பிரச்சனைகளில் ஒன்றாக சங்கத்தின் பெயர் பிரச்சனையை முன்வைத்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை, தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்றார் அவர்.

ரஜினியின் கருத்தை சரத்குமார் அணியினர் வழிமொழிய, பாண்டவர் அணியைச் சேர்ந்த ரோகிணி, விவேக், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள், பெயர் மாற்றம் தேவையில்லை என மறுத்தனர். நடிகர் கமல் பேசும்போது, தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்றார். இதுகுறித்து சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"பல கோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ரஜினிகாந்த் சொல்லியிருக்கும் கருத்தை நான் வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி. கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கமென்றோ கூட மாற்றிக் கொள்ளட்டும்.

அதே இந்திய பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக்கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம். கேரளா, கர்நாடக, ஆந்திரா நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து அவர்களாகவே இருப்பார்கள். கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பார்கள். நாங்கள் மட்டும் தென்னிந்தியா என்று வைக்க வேண்டுமா?" என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.