திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2025 (08:16 IST)

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த   போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே இந்திய பவுலர்கள் சிக்கனமாகவும் அவ்வப்போது விக்கெட்களை வீழ்த்தியும் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் அந்த அணியால் இறுதியில், 49.4 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 43 ஆவது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி 111 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து  இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார் விராட் கோலி. தனது சதத்துக்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

போட்டி முடிந்ததும் கோலியின் இன்னிங்ஸ் பற்றி பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “போட்டியில் பவர்ப்ளேவுக்குப் பின் பிட்ச் ஸ்லோவாக மாறும் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த ஓவர்களில் எங்கள் அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பினோம். கோலி எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதை விரும்புகிறார். அதனால் இன்று அவர் செய்ததைப் பார்த்து அணியில் யாருக்கும் ஆச்சர்யம் இல்லை. இது அவருடைய சாதாரண நாட்களில் ஒன்றுதான்” எனக் கூறியுள்ளார்.