திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (11:23 IST)

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது தருவதற்கு எதிர்ப்பு! ஆதரவாக குவிந்த பெரியாரிய ஆதரவாளர்கள்! – மியூசிக் அகாடமி அளித்த விளக்கம்!

TM Krishna
பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது தருவதற்கு பலத்தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மியூசிக் அகாடமி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.



கர்னாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணா அவரது இசைக்காகவும், சமூக கருத்துகளுக்காகவும் புகழ் பெற்றவர். தொடர்ந்து பெரியாரிய கொள்கைகளை பொதுவெளியில் அவர் பேசி வருவதும், இடதுசாரிய நபர்களுடனான அவரது பழக்கங்களும் கர்னாடக இசைத்துறையை சேர்ந்தோரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. மேலும் கர்னாடக இசைக்காக இயங்கும் மியூசிக் அகாடமியின் செயல்பாடுகள் குறித்து பல முறை விமர்சனங்களை வைத்தவர் டி.எம்.கிருஷ்ணா.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதை மியூசிக் அகாடமி டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது கர்னாடக இசைக்கலைஞர்கள் இடையே பிரச்சினையாக வெடித்துள்ளது. டி.எம்.கிருஷ்ணாவை விமர்சித்து பேசியுள்ள கர்னாடக இசைக்கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி உள்ளிட்ட பலர் சங்கீத கலாநிதி விருது வழங்கும் விழாவில் தாங்கள் கலந்துகொள்ள போவதோ, பாடப்போவதோ இல்லை என்று தெரிவித்திருந்தனர்.


டி.எம்.கிருஷ்ணாவுக்கு கர்னாடக இசை குழுவில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து பெரியாரிய, இடதுசாரிய நபர்கள் பலரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு தங்களது ஆதரவுகளை அளிக்கத் தொடங்கியதால் பரபரப்பு அதிகமானது.

இந்நிலையில் விருது வழங்குவது குறித்து விளக்கம் அளித்துள்ள மியூசிக் அகாடமி “டி எம் கிருஷ்ணா நீண்ட காலம் இசைத் துறையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையிலேயே இந்த விருது பரிந்துரைக்கப்படுகிறது. அவரின் கலையை தாண்டி வேறு எந்த காரணத்தையும் நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை” என கூறியுள்ளது.

Edit by Prasanth.K