வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:42 IST)

‘லப்பர் பந்து’ படத்தின் 'சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்!

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.
 
சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த யாதுமாகி படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கடுத்து வெளியான ஈசன் படம் தான் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது.
 
சினிமாவில் நுழைந்த இந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட 500 பாடல்களை எழுதியுள்ளார் மோகன் ராஜன். ‘விக்ரம் வேதா’வில் “யாஞ்சி யாஞ்சி” இசைஞானியின் 1000ஆவது படமான ‘தாரை தப்பட்டை’யில் “வதன வதன வடி வடிவேலனே” பாடல்களில் ஆரம்பித்து ‘குட் நைட்’ படத்தில் அனைவரையும் வசியம் பண்ணிய “நான் காலி” உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர்தான். இத்தனை வருடங்கள் பயணித்தாலும் ‘குட் நைட்’, ‘லவ்வர்’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள ‘லப்பர் பந்து’ ஆகிய படங்கள் தான் யார் இந்த பாடலாசிரியர் என்று மீண்டும் கேட்க வைத்திருக்கிறது. ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் மோகன் ராஜன் அந்த படத்திற்கு பாடல் எழுதிய அனுபவங்களையும் தனது திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.....
 
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் பொன் குமார் இயக்கத்தில் வெளியான ‘1947’ படத்தில் முதன்முறையாக இணைந்தேன். அந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதினேன். ‘குட் நைட்’ படத்தில் தயாரிப்பாளர் யுவராஜ் என்னுடைய நண்பர் என்பதுடன் அந்தப் படத்திற்கும் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கிறார் என்பதால் ஏற்கனவே எங்களுக்குள் அழகாக ஒத்துப்போன அலைவரிசை ‘குட் நைட்’ படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்டு வரச் செய்தது. சொல்லப்போனால் ‘குட் நைட்’ தான் என்னுடைய முழு முதல் ஆல்பம். அதில் ‘நான் காலி’ பாடல் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக மாறியது.
 
அதற்கு அடுத்ததாக ‘லவ்வர்’ படத்தில் நான் எழுதிய ‘தேன் சுடரே’ என்கிற பாடலும் இளைஞர்கள் அதிகம் முணுமுணுக்கும் பாடலாக அமைந்து விட்டது. நான் அதிக அளவில் காதல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்த நிலையில் எனது நண்பரும் நலம் விரும்பியுமான இயக்குநர் அருண்ராஜா காமராஜ் என்னை அழைத்து கனா படத்திற்காக தன்னம்பிக்கை ஊட்டும் பாடலை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அந்த படத்தில் இரண்டு பாடல்களை நான் எழுதினேன். அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் தமிழரசன் பச்சமுத்து. அந்த சமயத்தில் எங்களுக்குள் நட்பு உருவானது.  அப்போது என்னிடம் சில பாடல்களை குறிப்பிட்டு கூறிய அவர் அவற்றையெல்லாம் நான் தான் எழுதினேன் என்பது தெரியாமல் என்னிடம் இதே போன்ற பாடல்களை நான் படம் இயக்கும்போது எனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டார்.. அது நான் தான் என தெரிந்ததும் ஆச்சர்யப்பட்டுப்போய், நிச்சயமாக உங்களை நான் அழைப்பேன் என்று கூறினார். சொன்னது போலவே ‘லப்பர் பந்து’ படத்தில் உள்ள மூன்று பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். அதில் “சில்லாஞ்சிறுக்கி” பாடலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து எனக்கு இது நான்காவது படம், இன்னும் சசி சார் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 100 கோடி வானவில் படம் அடுத்து வெளியாக இருக்கிறது.
 
‘சுமோ’, ‘கும்கி 2’, சுந்தர் சியின் ‘ஒன் டு ஒன்’ சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ என அடுத்தடுத்து வெளியாக  இருக்கும் இந்த படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். மணிகண்டனுடன் ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களை தொடர்ந்து ஹாட்ரிக்காக அவர் தற்போது நடிக்க இருக்கும் குடும்பஸ்தன் படத்திலும் நான் பாடல்களை எழுதுகிறேன்.
 
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுடன் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக இணைந்து 13 பாடல்கள் எழுதி இருக்கிறேன். இசைஞானியின் இசையில் அவரது 1000ஆவது படமான தாரை தப்பட்டையிலும் எழுதும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையிலும் பாடல் எழுதிவிட்டால் இந்த மும்மூர்த்திகளின் இசையிலும் எழுதிய ஒரு இளம் கவிஞன் நானாகத்தான் இருப்பேன்.
 
சினிமாவில் ஆரம்பத்திலிருந்து என்னை தூக்கி வளர்த்தது எல்லாமே இயக்குநர் சசிகுமார் தான். அவருடைய ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஒரு பாடலாவது கொடுத்து விடுவார். அனிருத் இசையில் ‘டேவிட்’ படத்தில் இடம்பெற்ற மிகச்சிறந்த பாடலான “கனவே கனவே கலைவதேனோ” இளைஞர்களின் ஃபேவரைட் ஆன பாடல்களில் ஒன்று. யுவன் சங்கர் ராஜாவுடனும் பியார் பிரேமா காதல் உள்ளிட்ட மூன்று படங்களில் பணியாற்றியுள்ளேன்.
 
ஒவ்வொரு பாடலுக்கும் நான் ரொம்பவே மெனக்கெட்டு எழுதுவதால் இந்த போட்டி நிறைந்த உலகில் என்னுடைய வெற்றி பாடல்களே எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று தந்து விடுகின்றன. ‘சண்டி வீரன்’ படத்தில் நான் எழுதிய ‘தாய்ப்பாலும் தண்ணீரும்’ என்கிற பாடலை இயக்குநர் பாலா சார் கேட்கும் போதெல்லாம் தன்னையறியாமல் அழுது விடுவார். அந்த பாடல் தான் தாரை தப்பட்டை, அதைத் தொடர்ந்து என அவரது படங்களில் அடுத்தடுத்து பாடல் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது.
 
ஒரு கவியரங்கத்தில் என் பாடல்களை ஒருவர் பாராட்டி மேடையில் பேசும்போது என்னை ‘மினி நா.முத்துக்குமார்’ என்று கூறினார். அந்த ‘மினி’ என்கிற வார்த்தை என்னை அவ்வளவு சந்தோஷப்படுத்தியது. நா.முத்துக்குமார் தரமான இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றதால் தான் அவரால் மிகச்சிறந்த பாடல்களை கொடுக்க முடிந்தது. அந்த வகையில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர், லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், இப்போது இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து என எல்லோருமே என் எழுத்துக்கு மிகப்பெரிய சுதந்திரம் கொடுக்கின்றனர். இவர்களுடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கான வாய்ப்புகளும் வருகிறது என்று கூறினார்.