‘இந்தியன் - 2’ விற்காக கமல்ஹாசனோடு இணையும் ஷங்கர்?
நடிகர் கமல்ஹாசனோடு இயக்குனர் ஷங்கர் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.
இயக்குனர் ஷங்கர் தற்போது 2.0 பட வேலையில் பிஸியாக இருக்கிறார். அப்படத்தை முடித்த பின் அவர் அஜீத்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தகவல் உண்மையில்லை எனக் கூறப்பட்டது.
மேலும், 2.0 படம் முடிந்தவுடன், கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக தற்போது செய்திகள் உலா வருகிறது.
1996-ல் வெளியான படம் இந்தியன். அரசு அதிகாரிகள் பெரும் லஞ்சத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சமீபகாலமாக கமல்ஹாசன் அரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். மேலும், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் எனவும் அவர் அறிவித்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என ஷங்கர் தரப்பு கருதுவதாக தெரிகிறது.