1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (17:25 IST)

பெண்கள் விஷயத்தில் தவறானவர் கே.பாலசந்தர்.! சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!!

Suchitra
இயக்குநர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் ஊடகத்தில் பேசியதாக பாடகி சுசித்ராவுக்கு  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  
 
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை அவர் அந்த குணத்தோடு தான் இருந்தார் என்றும் பாடகி சுசித்ரா குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் பாடகி சுசித்ராவின் பேச்சுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும், யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.
 
தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் கே.பாலச்சந்தர்.

அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாடகி சுசித்ரா, கே.பாலசந்தரை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும், யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும்.

இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி சுசித்ராவை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.