6 மாவட்டங்களுக்கு இசை மழை அலெர்ட்..! இசைஞானி கொடுத்த சூப்பர் அப்டேட்!
தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் அடிக்கடி இளையராஜா பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. சமீபமாக இளையராஜா ராயல்டி தொடர்பாக வழக்குத் தொடர்ந்ததும், பாடலில் பாடல் வரிகளை விட இசைக்குதான் முக்கியத்துவம் எனப் பேசிவருவருவதும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.
இதனால் சோசியல் மீடியாக்களில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமான வாக்குவாதங்கள் தொடர்ந்து வந்தது. அதேசமயம் AI டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இளையராஜா பல்வேறு பாடல்களுக்கு நடனமாடுவது போல சிலர் வெளியிட்டு வந்த வீடியோக்களும் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த ஏராளமான பணிகளுக்கு இடையிலும் இளையராஜா அவர்கள் உலகம் முழுவதும் சுற்றி இசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திருநெல்வேலியில் அவரது இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து இப்போது அவர் திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சேலம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் விரைவில் இசைக் கச்சேரி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.