வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (07:32 IST)

தமிழர் வரலாற்றில் அழிந்துப்போன ஆதி உயிரினமான ‘யாளி’-யை கண் முன் நிறுத்தும் ‘கஜானா’ திரைப்படம்!

பான் இந்தியா திரைப்படங்களின் வருகை அதிகரித்திருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒரு திரைப்படம் வெளியானாலே அப்படத்தை பான் இந்தியா திரைப்படம் என்று சொல்கிறார்கள்.
 
ஆனால், மொழிகளை தாண்டி, கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்திய அளவில் ரசிகர்களை கவரக்கூடிய திரைப்படங்களே உண்மையான பான் இந்தியா திரைப்படமாகும்.
 
அப்படிப்பட்ட பான் இந்தியா திரைப்படமாக மட்டும் இன்றி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய கதைக்களத்துடன், வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’.
 
‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான  VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
குறிப்பாக இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
 
அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
யானை மற்றும் சிங்கத்தின் உருவம் கொண்ட இந்த யாளி விலங்கு தென்னிந்தியாவையும் தாண்டி இலங்கை போன்ற பிற நாட்டு கோவில்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
 
சிற்பக்கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் யாளி விலங்கு யானையையே விழுங்கும் ஆற்றல் படைத்தது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கருதப்படும் இத்தகைய விலங்கை இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் காட்சிப்படுத்தவில்லை.
 
சிற்பம் மற்றும் அச்சு வடிவில் நாம் பார்த்த யாளி விலங்கை முதல் முறையாக உயிரோடு கொண்டு வந்திருக்கிறது ‘கஜானா’ படக்குழு. இதற்காக அவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தரத்திலான VFX பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மலேசியா மற்றும் லண்டனில் நடைபெற்ற இபப்டத்தின் VFX பணிகள் யாளி விலங்கை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, அந்த விலங்கை வியக்க வைக்கும் விதத்திலும், சிறுவர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாக்கி யிருக்கிறார்களாம். 
 
இதுவரை டைனோசரை விரும்பி வந்த சிறுவர்கள் ‘கஜானா’ படத்திற்கு பிறகு யாளி விலங்கை நிச்சயம் கொண்டாட செய்வார்கள், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
சென்னையைச் சேர்ந்த க்ரீன்ஸ்கார் VFX (Greenscar VFX) நிறுவனம் தலைமையில், வெளிநாடுகளில், வெளிநாட்டு VFX கலைஞர்கள் கைவண்னத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் VFX காட்சிகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
மேலும், படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள், விலங்குகளுடன் உரையாடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் பேசி நடித்தது இதுவே முதல் முறையாகும். VFX பணிகளினால் இப்படம் வெளியாவது சற்று காலதாமதம் ஆனாலும், படத்தில் இடம்பெறும் VFX காட்சிகள் உலகத்தரத்தோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இடம்பெறாத காட்சிகளாகவும் இருக்கும்.
 
இத்தகைய முயற்சி குறித்து தயாரிப்பு திரைப்பட குழு கூறுகையில்,
 
”உலகளவிலான ஒரு கதைக்களத்தை படமாக்கும் போது அப்படத்தின் தரமும் உலகத்திரத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் தான் படத்தின் VFX காட்சிகளுக்கு அதிக செலவு செய்திருப்பதோடு, கடும் உழைப்பையும் கொடுத்திருக்கிறோம்
 
எங்கள் புதிய முயற்சி நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று நம்புகிறோம். அதேபோல், எங்களைப் போன்ற வளரும் தயாரிப்பாளர்களின் இத்தகைய முயற்சிக்கு திரையுலகின் ஆதரவாக நின்றால் எங்களுக்கு உற்சாகம் கொடுப்பதோடு, இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்வதற்கான உந்துதலாகவும் இருக்கும். எங்களுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து, பலர் இதுபோன்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்கான நம்பிக்கையையும் கொடுக்கும், எனவே எங்களது இந்த ‘கஜானா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் போல், திரையுலகினரும் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
 
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்.
 
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.
 
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய சாகசங்கள் நிறைந்த ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ கோடை விடுமுறையின் கொண்டாட்டமாக மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.
 
மேலும், ‘கஜானா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீபுரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை  படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.