அம்மாவுக்கு கோயில் திறந்த ராகவா லாரன்ஸ்
தன்னுடைய அம்மா கண்மணிக்காக கோயில் கட்டி, அதற்கு நேற்று திறப்பு விழா நடத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி, நாலு பேருக்கு உதவி செய்பவர் என்பதுதான் ராகவா லாரன்ஸின் அடையாளம். ‘என்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டப் போகிறேன்’ என இரண்டு வருடங்களுக்கு முன்பு அன்னையர் தினத்தன்று அறிவித்தார் லாரன்ஸ். அதைப்போலவே, அன்னையர் தினமான நேற்று, அந்தக் கோயிலுக்குத் திறப்பு விழா நடத்தியுள்ளார். பூந்தமல்லி அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்குள் வைக்கப்படும் சிலை, தன்னுடைய தாயைப் போலவே தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மூன்று வருடங்களாக அந்தச் சிலைக்காக உழைத்திருக்கிறார் லாரன்ஸ். “அமைதியையும், கடவுளையும் எல்லோரும் வெளியே தேடிக் கொண்டிருக்கிறார்கள். கடைசிவரை அது அவர்களுக்கு கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கூடவே இருக்கும் தெய்வமான தாயை யாரும் மதிப்பதில்லை. அதை உணர்த்துவதற்காகத்தான் இந்தக் கோயில்” என்கிறார் லாரன்ஸ்.